நெம்மெலி மையத்தில் மேம்பாட்டு பணிகள் - தென் சென்னைக்கு மாற்று வழிகளில் தண்ணீர்

சென்னைக்கு ஒரு நாளைக்கு தேவையான 800 மில்லியன் லிட்டர் தண்ணீரில் 90 மில்லியன் லிட்டர் தண்ணீரானது நெம்மெலி கடல்நீரை குடிநீராக்கும் மையத்தின் மூலம் பெறப்பட்டு தென் சென்னை பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 


இந்நிலையில், நெம்மெலி சுத்திகரிப்பு மையத்தில், மார்ச் 16-ம் முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை 15 நாட்களுக்கு தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால் அந்த மையத்தில் நீர் சுத்திகரிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.


இதனால், தென் சென்னை பகுதிகளான கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், மைலாப்பூர், மந்தைவெளி, சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் விநியோகம் செய்வதில் சில மாற்று வழிகளை மேற்கொள்ள உள்ளதாக மெட்ரோ குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.


செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் இருந்து நீரை எடுத்து சுத்திகரித்து பைப் மூலம் விநியோகம் செய்ய உள்ளதாகவும், இதனால் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், தண்ணீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டால் லாரிகள் மூலம் நீரை பெற்றுக் கொள்ளலாம் என்றும் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.


மேலும், தண்ணீர் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களையும் மெட்ரோ குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.


மைலாப்பூர், மந்தைவெளி - 8144930909


பெசன்ட் நகர், திருவான்மியூர் - 8144930913


கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி - 8144930914


ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் - 8144930915