பேஸ்புக்கில் வலை விரிப்பு: பெண்களே உஷார்!
'சமூக வலைதளமான, பேஸ்புக் வாயிலாக, வெளிநாட்டு மாப்பிள்ளைகள் போல பழகி, மோசடி செய்வோர் அதிகரித்து வருவதால், அதுபோன்று அறிமுகமாகும் நபர்களிடம், பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, போலீசார் எச்சரித்துள்ளனர்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 35; பொறியாளரான இவர், சமூக வலைதளமான, பேஸ்புக் வாயிலாக, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு காதல் விலை வீசியுள்ளார். அவர்களில், முதிர்கன்னியர்களாக இருக்கும், அரசு டாக்டர்கள், வங்கி அதிகாரிகள், பேராசிரியர்கள் என, ஒன்பது பேரிடம், வெளிநாடு வாழ் இந்தியர் என, கதை விட்டுள்ளார். மேலும், வெளிநாட்டில் டாக்டர் அல்லது இன்ஜினியர் வேலை பார்ப்பதாகவும், இஷ்டம் போல கூறியுள்ளார்.
தன் வலையில் சிக்கிய, ஒன்பது பெண்களுடனும், நட்சத்திர ஓட்டல்களில் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். திருமணத்திற்கு முன், சாந்தி முகூர்த்தமும் நடத்தி உள்ளார்.இவரது மோசடி வித்தை தெரிய வந்ததும், அந்த பெண்கள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார், 2019 ஜூனில், சக்கரவர்த்தியை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
விசாரணையில் இவர், பெண்களிடம், பணம் மற்றும் நகைகள் பறிப்பு என, ஏழு கோடி ரூபாய்க்கு மேல் மோசடியாக பெற்று, 'சக்கரவர்த்தி பில்டர்ஸ்' என்ற பெயரில், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.
தற்போது, சக்கரவர்த்தியை போல, வெளிநாடுகளில் வேலை செய்வதாக கூறி, 'பேஸ்புக்'கில் பல பெண்களிடம் பழகி, பணம், நகை பறிப்பதுடன், உல்லாசம் அனுபவித்து, மோசடி செய்பவர்கள் அதிகரித்து வருவதாக போலீசார் கூறுகின்றனர்.
இதனால், சமூக வலைதளங்களை, பெண்கள் கையாளும் விதம் பற்றி, மகளிர் காவல் நிலையங்களில், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, உஷார்படுத்தி வருகின்றனர்.
பெண்களுக்கு போலீசார் கூறியுள்ள அறிவுரைகள்:
'பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப்' போன்றவற்றில், நண்பர்களாக சேர அழைப்பு விடுப்போர் பற்றி, நன்கு ஆராய்ந்த பின், ஏற்றுக்கொள்ள வேண்டும்
சந்தேக நபர்களாக இருந்தால், அவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டாம்
மோசடி பேர்வழிகள், பிரபலங்களின் பெயர்களில் கணக்கு துவக்கி உள்ளனர். படித்தவர், நல்ல வேலையில் இருக்கிறார் என்பதற்காக, அவரை உடனடியாக நம்பிவிட வேண்டாம்.இவ்வாறு, போலீசார் அறிவுரை வழங்கி உள்ளனர்.