மக்கள் ஊரடங்கு: ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் ரயில்கள் நிறுத்தம்

பிரதமர் மோடி அறிவித்த மக்கள் ஊரடங்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் ஃபாஸ்ட் ரயில்கள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. அதனைக்கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.


கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் மோடி, ‘கொரோனாவைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக ஞாயிறன்று மக்களே ஊரடங்கு நடத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மோடியின் அறவிப்புக்கு பல மாநில முதல்வர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


அதன்படி, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பேருந்துகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தநிலையில், சனிக்கிழமை இரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வரை எந்த பாசஞர் ரயில்களும் இயங்காது என்றும், ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணியிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதும் 245 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.