வெளிநாடு, வெளியூர்களிலிருந்து குவியும் இளைஞர்கள்.. தென் மாவட்டங்களுக்கு அபாயம் .. அரசு கவனம் அவசியம்.

நெல்லை: வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களில் இருந்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சி, தமிழகத்தில் சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்துள்ள நபர்கள், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை


பின்பற்றாமல் சுற்றித் திரிவதால், கிராமப்புற பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இதை, சரி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து தமிழகத்துக்கு விமானங்கள் மூலமாக வருகை தந்தோர் பரிசோதிக்கப்பட்டு, அவரவர் வீடுகளிலேயே தங்கி இருக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்


வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்தததால், தமிழகத்திற்கு தொடர்ந்து வரக்கூடிய பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.


இவர்களில் பெரும்பாலானோர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில், கிராமங்களில் வசிக்க கூடியவர்கள்.


வறுமையின் காரணமாக வேலை தேடி வெளிநாடுகளுக்கு சென்றவர்கள். அவர்கள் திரும்பி வருகை தந்தது பிரச்சனை கிடையாது. ஆனால், அரசு எச்சரித்தபடி அவர்கள் வீட்டில் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் கொடுமையானது.


நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே, துபாய் நாட்டில் இருந்து வந்த ஒரு இளைஞர், இப்படித்தான் இஷ்டத்திற்கு சுற்றித் திரிந்துள்ளார். ஒரு திருமண வீட்டுக்கும் சென்று, மணமகன், மணப்பெண்ணுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருந்தது பிறகுதான் தெரியவந்தது.


அரசு உத்தரவிட்டபடி, அவர் வீட்டிலேயே இருந்திருந்தால் இந்தப் பிரச்சினை வந்திருக்காது. தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார். இதில் பிரச்சினை என்னவென்றால், அவர் கை கொடுத்த மணமகன், மணப்பெண் உட்பட இதுவரை அவர் எந்தெந்த ஊர்களில் யாரை யாரை சந்தித்தாரோ, அத்தனை பேரையும் தனிமைப்படுத்த வேண்டிய கட்டாய சூழ்நிலை வந்துள்ளது.


தற்போது, வெளிநாடு மட்டுமின்றி, திருப்பூர், சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் பணியாற்றி வந்தவர்களும் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்புகின்றனர். இவர்கள் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் கிராமங்களில் சுற்றி வருகின்றனர்.


பாதிப்பு இருந்தாலும் அவர்கள் வெளியே சொல்வதில்லை. நோயாளி போல பார்ப்பார்கள் என நினைத்து, குடும்பமே அதை மூடி மறைக்கிறது.


தென் தமிழகத்தின் பல்வேறு கிராமங்கள் முதியோர் இல்லங்களாகத்தான் காட்சி அளிக்கிறது. ஏனெனில், வயதானவர்கள் மட்டுமே அங்கு வசிக்கிறார்கள். இளைஞர்கள் வேலை தேடி வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும்தான் சொல்கிறார்கள்.


இப்படி இருக்க கூடிய சூழ்நிலையில், வெளிநாடுகளிலிருந்து திரும்பியோர், வெளியூர்களிலிருந்து திரும்பியோர் மூலமாக வயது முதிர்ந்தவர்களுக்கு, கொரோனா வைரஸ் பரவிவிட்டால் அவர்களால் அதை தாக்குபிடிக்க முடியுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.


எனவே, உடனடியாக மாநில அரசு இதுபோன்று வெளிநாட்டிலிருந்து வந்து தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் நபர்களை கண்காணிக்க வேண்டும், காவல் துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவ்வாறு வெளியே சுற்றித் திரிந்தால், அவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று இன்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளது ஒரு நல்ல முன்னெடுப்பு.


ஆனால் இது காவல்துறையினரின் ஒத்துழைப்போடுதான் சாத்தியமாகும். கிராமங்களில் இது தொடர்பான விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்.


இவ்வாறான நபர்கள் வெளியே சுற்றித் திரிந்து கொண்டு இருந்தால் காவல்துறைக்கு தகவல் தரும்படி ஊர் பெரியவர்களிடம் காவல்துறை கேட்டுக்கொண்டு தொலைபேசி எண்களையும் வழங்கி விட்டு வர வேண்டும்.


இவ்வாறு ஒவ்வொரு குடிமகனையும் காவல்துறையினராக மாற்றினால் மட்டுமே, தென் தமிழகத்தின் கிராமங்கள் இந்த கொடிய வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும்.


இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை விபரீதமாகி விடும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், தென் மாவட்ட கிராமப்புறங்களில் பெருகி வரும் இந்த அபாயத்தை கருத்தில் கொண்டு அங்கு அதிக அளவில் கொரோனா வைரஸ் சோதனை மையங்களை விரிவுபடுத்த வேண்டிய கட்டாயம் இருப்பதையும் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும், என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்