வெறிச்சோடிய தி.நகர்;' - கொரோனா தடுப்புப் பணிகளை விவரிக்கும் அரசு செயலர்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வணிக வளாகங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி சென்னையில் மக்கள் நெரிசல்மிக்க பகுதிகளில் செயல்பட்ட பெரிய வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன.


சென்னை தி.நகரில் மூடப்பட்ட கடைகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரான ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.


அப்போது அரசு உத்தரவின்படி பூட்டப்பட்ட கடைகள் அமைந்துள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ``வியாபாரிகள் சங்கங்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்துவருகிறார்கள். மத்திய, மாநில சுகாதாரத்துறை, உலக சுகாதாரத்துறை வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுத்துவருகிறோம். சென்னையில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள கடைகளை மூட உத்தரவிட்டுள்ளோம்.


100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இருக்கும் கடைகளைத்தான் மூடச்சொல்லியுள்ளோம். மற்ற கடைகளை தொந்தரவு செய்யவில்லை. தலைமைச் செயலாளர், முதல்வர் ஆகியோர் பல அறிவுரைகளைக் கொடுத்து வருகின்றனர்.


முதல்வர் அறிவித்துள்ள 25 பாயின்ட்ஸ்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தால் நோய் வராமல் தடுக்கலாம். பீதியை ஏற்படுத்துவது முற்றிலும் தவறு. தேவையில்லாமல் அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது" என்றார்.


சென்னையில் எந்நாளும் பரபரப்பாகவும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள தி.நகர் ரங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான் சாலை, தெற்கு உஸ்மான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் இன்று காலை முதல் திறக்கப்படவில்லை.


அதனால், தி.நகர் பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டன. கடைகள் பூட்டப்பட்டிருந்ததால் ஊழியர்களும் வேலைக்கு வரவில்லை. இதன் காரணமாக மேற்கு மாம்பலம் ரயில் நிலையத்திலும் தி.நகர் பஸ் நிறுத்தத்திலும் வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் இல்லை.


கடைகள்திடீரென மூடப்பட்டதால் பொருள்களை வாங்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். திறந்திருந்த சிறிய கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. மக்கள், தங்கள் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.


கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பொதுமக்கள் தரப்பிலிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைத்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


அதே நேரத்தில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் அதிகாரிகளும் ஊழியர்களும் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் இயக்கப்படும் ரயில்கள், பஸ்களில் வழக்கத்தைவிட கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு