தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மூட அதிரடி உத்தரவு
கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, வருகிற 31ஆம் தேதி வரை, அனைத்துக் கல்வி நிறுவனங்களையும் மூட, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். டாஸ்மாக் பார்கள், திரையரங்குகள், மால்கள் உள்ளிட்டவற்றை மூடவும், முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்றுநோய் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அனைத்து, அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை வருகிற 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 10, 11, 12ஆம் வகுப்புகளின் பொதுத்தேர்வுகள், கல்லூரித் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டாஸ்மாக் பார்களை மார்ச் 31 வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்களை மார்ச் 31 வரை மூடவும் ஆணையிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் தவிர வேறு நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்த கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உள்ளிட்டவற்றில் அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், கோடை கால பயிற்சி வகுப்புகள், முகாம்கள், மாநாடுகள், கருத்தரங்குகள் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி வழங்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
அனைத்து விளையாட்டு அரங்குகள், கிளப்புகள், அனைத்துவகை பார்களையும், சுற்றுலா பயணிகள் தங்கும் ரிசார்ட்டுகளையும் மார்ச் 31 வரை மூட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுதலங்களில், பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உயிரியல் பூங்கா, ஜிம் உள்ளிட்ட உடற்பயிற்சி மையங்கள், அருங்காட்சியகங்களை மூட ஆணையிடப்பட்டுள்ளது. பால் மற்றும் குடிநீர் வினியோகம், மளிகை விற்பனை, போக்குவரத்து, அரசு அலுவல்கள் உள்ளிட்ட அவசியமான மற்றும் அத்தியாவசியப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் ஊழியர்கள் அடிக்கடி கைகள் கழுவுவதை நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
யாரேனும் கொரோனா வைரஸ் காய்ச்சல் பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. அனைத்து உத்தரவுகளும் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.