கால் சென்டர் ஹைடெக் மோசடி!' - வி.சி.க பிரமுகரால் சிக்கிய பென்ஸ் சரவணன்
சென்னை அண்ணாசாலையில் செயல்பட்ட பென்ஸ் கிளப், நஷ்டம் ஏற்பட்டதால் போலி கால் சென்டரை நடத்த அனுமதியளித்த அ.தி.மு.க-வைச் சேர்ந்த பென்ஸ் சரவணன், சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்.
யார்
இந்த பென்ஸ் சரவணன், வி.சி.க பிரமுகர் செல்வா என்று விசாரித்தோம். பென்ஸ் சரவணன், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பென்ஸ் கிளப்பை நடத்திவருகிறார். இவர் அ.தி.மு.க-வில் உள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் என வி.வி.ஐ.பி-க்கள் பட்டியலில் இருப்பவர்களைச் சந்தித்து பேசுமளவுக்கு செல்வாக்கு படைத்தவர் என்கிறார்கள்.
பென்ஸ் சரவணன் தன் முகநூலில் பல வி.வி.ஐ.பி-க்களின் புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். சில மாதங்களுக்கு முன், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் பென்ஸ் சரவணன் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளியில் வந்த அவர், இந்தத் தடவை போலி கால் சென்டர் வழக்கில் கைதாகியுள்ளார். இது அவரின் நண்பர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சரவணனுக்கு வேண்டப்பட்டவர்கள், போலி கால் சென்டருக்கும் பென்ஸ் சரவணனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. சரவணன் நடத்தும் கிளப்புக்கு வாடிக்கையாளர்களைப் பிடிப்பவர்கள் செய்த தவற்றால், அவருக்கு சிக்கல் எழுந்தது. தற்போது அவரின் அப்பா இறந்துவிட்டதால் கிளப்பை சரியாக கவனிக்க முடியாமல் இருந்தார்.
தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக போலி கால் சென்டரை நடத்த பென்ஸ் கிளப்பை வாடகைக்கு விட்டதால் சிக்கலில் சிக்கிக்கொண்டார். உதவி என்று கேட்டு வருபவர்களுக்கு சரவணன் பல உதவிகளை செய்துள்ளார்" என்றனர்.
வி.சி.க-வைச் சேர்ந்த செல்வா குறித்து வி.சி.-கவினரிடம் கேட்டபோது, “கட்சிப் பணியில் அவ்வளவாக ஈடுபட மாட்டார். எப்போதாவதுதான் கட்சிக் கூட்டங்களில் அவரைப்பார்க்க முடியும். தற்போது அவர் கைதானபிறகுதான் செல்வா குறித்த தகவல்கள் கட்சித் தலைமைக்குத் தெரியவந்துள்ளது.
செல்வா, போலீஸாரிடம் மாநில துணைச் செயலாளராக இருப்பதாகக் கூறியதாக தகவல் வெளியாகியது. ஆனால், அது உண்மையில்லை" என்றனர்.
ஏடிஎம் கார்டை புதுப்பித்துத் தருகிறோம், லோன் வாங்கித் தருகிறோம்' என்று செல்போன்களுக்கு அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்கின்றனர் போலீஸார். ஹலோ நாங்கள் உங்களிடம் 2 நிமிடம் பேசலாமா?' என்ற அழைப்பு செல்போன் வைத்திருப்பவர்களுக்குக் கண்டிப்பாக வந்திருக்கும்.
எதிர்முனையில் பேசுவது பெரும்பாலும் பெண் குரலாகத்தான் இருக்கும். நாங்கள் குறைந்த வட்டியில் வங்கிகள் மூலம் உங்களுக்கு கடன் வாங்கிக் கொடுக்கிறோம்.
பெர்சனல் லோன் முதல் வீட்டுக்கடன் வரை ஈஸியாக வாங்கலாம் என்று அந்தப் பெண் மூச்சுவிடாமல் பேசி முடிப்பார். அவரிடம் லோன் குறித்து விவரம் கேட்டால் அதுதொடர்பான தகவல்களும் அடுத்த சில நிமிடங்களில் சொல்வதோடு வேலை, சம்பளம், குடும்பம் உள்ளிட்ட விவரங்களை அந்தப் பெண் சேகரித்திருப்பார். அந்தப் பெண்ணின் காந்தக் குரல் பேச்சை நம்பி, லோன் வாங்க சம்மதித்தால் அவ்வளவுதான்.
உங்கள் வங்கிக் கணக்கிலிருந்த பணம் சேவைக் கட்டணத்துக்காக எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், கடைசிவரை நீங்கள் கேட்ட லோன் கிடைக்காது. இப்படி போன் கால் அழைப்பு மூலம் பணத்தை இழந்தவர்கள் கடந்த சில ஆண்டுகளாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார்களைக் கொடுத்தனர்.
அதுதொடர்பாக விசாரிக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்பேரில் கூடுதல் கமிஷனர் ஈஸ்வர மூர்த்தி மேற்பார்வையில் துணை கமிஷனர் நாகஜோதி, உதவி கமிஷனர் பிரபாகரன், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வீராசாமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தத் தனிப்படை போலீஸார் நடத்திய விசாரணையில், போலி கால் சென்டர்களிலிருந்து வரும் போன் அழைப்புகளை நம்பி வங்கிக் கணக்கு விவரங்களைக் கூறி பணத்தை இழந்ததை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் உறுதிப்படுத்தினர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கோபி கிருஷ்ணன் என்பவர் போலி கால் சென்டர் நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதித்ததை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கண்டறிந்தனர்.
பின்னர், அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்தொடர்ச்சியாக கோபிகிருஷ்ணனின் கூட்டாளிகள் கைது செய்யப்பட்ட பிறகும் பணத்தை மக்கள் இழந்து வருவதைத் தடுக்க முடியவில்லை. அதனால், இந்தக் கும்பலின் பின்னணியில் பெரிய நெட்வொர்க் இருப்பதை போலீஸார் விசாரணை மூலம் உறுதிப்படுத்தினர்.
மோசடி கும்பல் குறித்து விசாரித்தபோது, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து எடுக்கப்படும் பணம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வங்கிக் கிளையில் அக்கவுன்ட் வைத்துள்ள சக்ருதினுக்குச் செல்வதை போலீஸார் உறுதிப்படுத்தினர். இதையடுத்து, சக்ருதினிடம் விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, சக்ருதின்அவரின் கூட்டாளி சலீம் ஆகியோரை போலீஸார் கடந்த மாதம் 29-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரித்தபோது சென்னை அண்ணாசாலையில் உள்ள பிரபலமான டவரில் செயல்படும் பென்ஸ் கிளப்பில் போலி கால் சென்டரின் அலுவலகம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் அந்தக் கிளப்பின் உரிமையாளரான அ.தி.மு.க-வைச் சேர்ந்த பென்ஸ்' சரவணனிடம் விசாரித்தனர். அப்போது போலி கால் சென்டரை நடத்தியவர் பள்ளிக்கரணையைச் சேர்ந்த வி.சி.க-வைச் சேர்ந்த செல்வா என்கிற செல்வக்குமார் என்ற தகவல் போலீஸாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, அவரை தேடியபோது செல்வக்குமார், கிருஷ்ணகிரியில் தலைமறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர். அங்கு சென்ற போலீஸார் செல்வக்குமார், அவரின் கூட்டாளிகள் மிதுன், குமரன் ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், "சென்னை அண்ணாசாலையில் செயல்பட்டு வந்த பென்ஸ் கிளப், சில மாதங்களாக நஷ்டத்தில் இயங்கி வந்துள்ளது. அதனால், அதன் உரிமையாளர் பென்ஸ் சரவணன், கிளப்பை நடத்த முடியாமல் தவித்துவந்துள்ளார்.
அதை தங்களுக்குச் சாதகமாக செல்வக்குமாரும் அவரின் கூட்டாளிகளும் பயன்படுத்தியுள்ளனர். பென்ஸ் கிளப்பில் போலி கால் சென்டரை நடத்த மாதம் 5 லட்சம் ரூபாய் வாடகையாகத் தருவதாக அந்தக் கும்பல் கூறியுள்ளது. அதற்கு பென்ஸ் சரவணனும் சம்மதித்துள்ளார்.
இதையடுத்து அண்ணாசாலையில் உள்ள பென்ஸ் கிளப்பிலிருந்து போலி கால் சென்டர் செயல்பட்டுவந்துள்ளது. இந்தக் கிளப்பில் பெண்கள், ஆண்கள் என பலர் வேலைபார்த்து வந்துள்ளனர். அவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
போலி காலி சென்டரில் 10 ஊழியர்களுக்கு ஒரு டீம் லீடர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு வேலை பார்ப்பவர்களுக்கு இது ஒரு போலி கால் சென்டர் என்ற தகவல் தெரியாது. அந்தளவுக்கு எல்லாவற்றையும் பிளான் போட்டு இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் செய்துள்ளனர்.
கால் சென்டரிலிருந்து பேசும் பெண்கள், ஆண்கள் ஆகியோருக்கு மாதம் 100 பேர் என்ற டார்க்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த டார்க்கெட்டைவிட அதிகளவில் வாடிக்கையாளர்களை பிடிப்பவர்களுக்கு சம்பளத்துடன் ஊக்கத் தொகையும் கொடுக்கப்பட்டுள்ளது.
அதனால் இந்த சென்டரில் பணியாற்றியவர்கள் போட்டி போட்டு வேலை பார்த்துள்ளனர். தினமும் 25 பேர் என்ற இலக்கோடு அவர்கள் செயல்பட்டுள்ளனர். ஒவ்வொரு டீமும் ஒரு வேலையைப் பார்த்துள்ளது.
முதல் டீமில் உள்ளவர்கள் போன் நம்பர்களை சேகரித்துக் கொடுப்பார்கள். அடுத்த டீமில் உள்ளவர்கள் போனில் பேசி விவரங்களைச் சேகரிக்க வேண்டும்.
மூன்றாவது டீமில் உள்ளவர்கள்தான் லோன் தொடர்பான தகவல்களைப் பெற்று, சேவைக் கட்டணத்தை பெறுவார்கள். இன்னொரு டீம், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கிலிருந்து வந்த பணத்தை ஆய்வு செய்வார்கள். இப்படி ஒவ்வொரு டீமுக்கும் வேலை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படும் தகவல் பெரும்பாலான ஊழியர்களுக்குத் தெரியவில்லை . ஆனால், இந்த டீமில் உள்ள லீடர்களுக்கு மட்டுமே அனைத்து உண்மைகளும் தெரியும். அதனால், அவர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. போலி கால் சென்டர் வழக்கில் கைதாகியுள்ள பள்ளிக்கரணையைச் சேர்ந்த செல்வா, கோசாலா என்ற பெயரில் பசு பாதுகாவலர் என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார்.
செல்வா, கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் போலி கால் சென்டர் பிசினஸில் ஈடுபட்டு பல கோடிகளைச் சம்பாதித்துள்ளார். போலி கால் சென்டரில் சட்டரீதியாக பிரச்னைகளைச் சந்திக்க ஒரு சட்டக்குழு டீமையும் செல்வா வைத்திருந்துள்ளார்.
அந்த டீம்தான் சட்டரீதியான ஆலோசனைகளை செல்வாவுக்கு வழங்கிவந்துள்ளது. அதனால்தான் செல்வா, போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பிவந்தார். புகார் கொடுப்பவர்களை மிரட்ட பவுன்சர் டீமும் செல்வாவிடம் இருந்துள்ளது.
போலி கால் சென்டர் மூலம் கொட்டிய பணத்தில் பென்ஸ், ஜாக்குவார் போன்ற சொகுசுக் கார்களில் செல்வாவும் அவரின் கூட்டாளிகளும் வலம் வந்துள்ளனர். இந்தக் கும்பல் பயன்படுத்திய 20 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளோம்.
3,00,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளோம். இந்தக் கும்பலால் ஏமாற்றப்பட்டவர்களின் பட்டியலில் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், வங்கி மேலாளர்கள் உள்ளனர். அவர்கள் எல்லோரும் வெளியில் தெரிந்தால் அவமானம் எனக் கருதி புகார் கொடுக்கவில்லை.
போலி கால் சென்டர் வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவின் 2 உதவி கமிஷனர்களும் ஏமாந்துள்ளனர். இது மட்டுமல்லாமல் இந்த வழக்கை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் சிலரை வளைக்க லட்சக்கணக்கில் பேரம் பேசப்பட்டுள்ளது.
அதில் சில லட்சம் ரூபாய், சில அதிகாரிகள் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து போலி கால் சென்டர் குறித்து விசாரணை நடந்துவருகிறது. பணத்தை இழந்தவர்களுக்கு சட்டரீதியாக அதைத் திரும்பக் கொடுக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகிறது" என்றார்.