'கட்சி ரெடி இல்லை; ஆனால், வாரிசு ரெடி' - ரஜினியின் கணக்கு எடுபடுமா...
"என்னால் முதல்வர் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நான் கட்சித் தலைவர்தான். ஆட்சித் தலைவர் இல்லை.
அன்பு கொண்டவரை, பாசம் கொண்டவரை, நிர்வாகத் திறமை உடையவரையே முதல்வர் ஆக்குவேன்” என்று சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடியாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
தமிழகசட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவேன் என்று 2017-ம் ஆண்டு அறிவித்த ரஜினிகாந்த் இப்போது தனது அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவு படுத்தியிருக்கிறார்.
குறிப்பாக கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக தமிழக அரசியல் களத்தில் அவ்வப்போது ரஜினியின் தாக்கம் இருந்துகொண்டே இருக்கிறது.
இந்த நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் அவர் கட்சி ஆரம்பித்தால் அது தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், தனக்கு பதவி மேல் ஆசை இல்லை எனவும், நிர்வாகத் திறமை உள்ள ஒருவரை முதல்வராக்கி அவரது செயல்பாடுகளைக் கண்காணிக்கும் கட்சித் தலைவராக மட்டுமே தான் இருப்பேன் என்றும் அறிவித்துள்ளார்.
இதற்கான அரசியல் எழுச்சி தமிழகத்தில் உருவாகும் என்றும் சொல்லியிருந்தார்.இந்த நிலையில், இவரது அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் களத்திலும் இது விவாதமாக மாறியது. இந்த நிலையில், ரஜினியின் அரசியல் என்ட்ரி கண்டிப்பாக இருக்கும்.
ஆனால், அவரது திட்டத்துக்குப் பின்னால் அவரது ரத்தபந்தமே இருக்கப்போகிறது என்ற தகவலைச் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள் ரஜினிக்கு நெருக்கமான சகாக்கள்.நம்மிடம் அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இதுதான்.
"ரஜினிக்கு உண்மையில் முதல்வர் பதவி மீது விருப்பம் இல்லை என்பது அவருக்கு நெருக்கமானவர்கள் அறிந்த ஒன்று. சோ உயிரோடு இருந்தபோதே கட்சி ஆரம்பிக்க அவரிடம் வற்புறுத்தினார். ஆ
நீங்கள் முதல்வராக இருந்தால் கட்சி ஆரம்பிக்க நான் தயார் என்று சொல்லி அவரையே அதிரவைத்தவர் ரஜினி. இப்போதும் அந்த முடிவில் உறுதியாக இருக்கிறார். முதல்வர் பதவி மீது அவருக்கு விருப்பம் இல்லையென்றாலும், தமிழகத்தில் ஒரு நல்ல ஆட்சியைக் கொடுக்க வேண்டும் என்கிற விருப்பம் அவர் மனதில் உள்ளது.
அதற்காகவே அவர் பலரிடம் ஆலோசனையும் கேட்டுவந்தார். இளைஞர் ஒருவரையே பதவிக்கு கொண்டுவர வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கிறது. அந்த விருப்பத்தை அவருடைய வாரிசுகள் நிறைவேற்ற எண்ணுகிறார்கள் என்பதே புதிய செய்தி” என்கிறார்கள்.
ரஜினிக்கு ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர். ஐஸ்வர்யா, நடிகர் தனுஷைத் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தைக் கவனித்துகொண்டுவருகிறார்.
இரண்டாவது மகள் சௌந்தர்யாவுக்கு முதல் திருமணம் நடந்து அது விவகாரத்தானது. அதற்குப் பிறகு பிரபல தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன் விசாகனை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.
விசாகன் தற்போது மருந்துக் கம்பெனி உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்திவரும் தொழில் அதிபராக இருக்கிறார். சௌந்தர்யா ஏற்கெனவே திரைத்துறையிலும் கால்பதித்து இருக்கிறார்.
ரஜினியின் மனைவி லதா, அரசியல் விஷயங்களில் பெரிதாகத் தலையிடுவது கிடையாது. ஆனால், சௌந்தர்யா அப்படி அல்ல. அரசியல் மீது அவருக்கு ஆர்வம் அதிகம் என்பதை ரஜினியும் அறிந்துவைத்துள்ளார்ரஜினியை வைத்து அனிமேஷன் படமாக இவர் தயார் செய்த கோச்சடையான் திரைப்படம் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தது. அந்தப் படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி பெரும்பாடுபட்டார்.
அதற்குப் பிறகு படம் தயாரிப்பதைக் குறைத்துக்கொண்டார். இப்போது ரஜினிக்குத் துணையாக பல பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ரஜினி இமயமலை செல்லும்போது அவருடன் சென்றார் சௌந்தர்யா.
மேலும், ரஜினி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலும் பங்கெடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதைத்தவிர ரஜினியின் அரசியல் என்ட்ரிக்கும் பல உதவிகளைச் செய்துவருகிறார்” என்கிறார்கள்.தற்போது ரஜினியின் ட்விட்டர் கணக்கைப் பார்த்துக்கொள்வது சௌந்தர்யாதான்.
அதேபோல் ரஜினிக்கு வரும்காலத்தில் சமூகவலைதளங்களில் ஆதரவு வட்டத்தை உருவாக்கும் வேலையிலும் இறங்கியிருக்கிறார். சௌந்தர்யாவுக்குத் தனியாக அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்தில் இப்போது ரஜினியின் சமூகவலைதளங்களைப் பார்த்துக்கொள்ள ஆட்களை நியமித்துள்ளார்.
சில நாள்களாக ரஜினி மன்றத்தின் சார்பில் சமூகவலைதளங்களில், "இப்போ இல்லைன்னா.. எப்பவும் இல்லை” என்கிற வாசகம் ரஜினியின் படத்துடன் பரப்பப்பட்டு வருகிறது.
இதற்குப் பின்னால் இருப்பது சௌந்தர்யா என்கிறார்கள். சௌந்தர்யாவின் இந்த எண்ணத்துக்கு அவரின் கணவர் விசாகன் தரப்பிலும் பச்சைக் கொடி காட்டப்பட்டுவிட்டது என்கிறார்கள்.
தான் கட்சி ஆரம்பித்தால் தனக்கு அடுத்த நிலையில் நம்பிக்கையான ஒரு நபர் தலைமைக்கு வேண்டும், அ.தி.மு.க பாணியில் வாரிசு இல்லாத நிலை தனது கட்சிக்கு வந்துவிடக் கூடாது என்கிற எண்ணமும் ரஜினி மனதில் இருக்கிறது.
மேலும், அரசியல் ஆசை தனக்கு இருக்கிறது என்பதை ஓபனாகவே தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லியிருக்கிறார் சௌந்தர்யா. "அப்பா கட்சியை மட்டும் ஆரம்பித்தால் போதும்.
அதன் பிறகு முழுநேரமும் அதை நான் பார்த்துக்கொள்ளுவேன்” என்றும் சொல்லியிருக்கிறார். இதற்கு ரஜினியும் பச்சைக் கொடிகாட்டிவிட்டார் என்கிறார்கள். எழுபது வயதுக்கு மேல் எனக்குப் பதவி ஆசையா வரப்போகிறது, இளைஞர்களுக்கு வாய்ப்பு என்று அவர் பொதுவாகச் சொன்னாலும் தனது வாரிசு ஒருவரை, தான் ஆரம்பிக்கும் கட்சியில் முக்கியப் பொறுப்புக்கு கொண்டுவந்துவிட நினைக்கிறார்.
ஏன்? ஆட்சிக்கு வாரிசும், கட்சிக்குத் தானும் என்கிற எண்ணமும் ரஜினியிடம் இருக்கலாம். ஆனால், சௌந்தர்யா அரசியல் களத்தில் களமாட அனைத்து விதங்களிலும் தயாராகிவருகிறார். அடுத்த சில நாள்களில் அப்பாவுக்கு ஆதரவாக அவர் சமூகவலைதளங்களில் ஆரம்பிக்கப் போகும் பிரசாரமே அதற்குச் சாட்சியாக அமையும் என்கிறார்கள்.
சௌந்தர்யாவை முன்னிலைப்படுத்தினா ரசிகர்களும் ஏற்றுக்கொள்ளுவார்கள், தன் மீது வைக்கப்படும் வெளிமாநிலத்தவர் என்கிற விமர்சனமும் சௌந்தர்யா விஷயத்தில் அடிபடும் என்று கணக்குப் போடுகிறார் இந்தக் கதாநாயகன். ஆனால், அதற்கு மக்களிடம் ஆதரவு எப்படி இருக்கும் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!
கட்சி ஆரம்பிக்கும் முன்பே அரசியல் வாரிசு களம் இறங்க ஆரம்பித்துவிட்டார்!