முதல்வரை அவதூறாக பேசியதாக சீமான் மீதான வழக்கு - விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்து பேசியதாக செய்தி வெளியானது.
அந்த கருத்தும், செய்தியும் தமிழக அரசுக்கும், முதல்வரின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சீமான் மீதும், தனியார் தொலைக்காட்சி மீதும், அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழக முதல்வர் சார்பாக சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், தனக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரியும், வழக்கில் நேரில் ஆஜராக விளக்கு அளிக்க கோரியும் சீமான் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து செய்யபட்டது.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விசாரணைக்கு சீமான் நேரில் ஆஜராகவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் முடியாது என தெரிவித்த நீதிபதி, மனு குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 23 ஆம் தேதி தள்ளிவைத்தார்