நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளையும் மூட மத்திய அரசு உத்தரவு

கொரோனா எதிரொலியாக, நாடு முழுவதும், பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. உடற்பயிற்சி கூடங்கள், தியேட்டர்கள், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவற்றையும், மார்ச் 31வரை மூடவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 


தலைநகர் டெல்லியில், மத்திய அரசின், சுகாதாரத்துறை, விமானப் போக்குவரத்துறை, உள்துறை ஆகியனவற்றின் இணைச் செயலாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, நாடு முழுவதும், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், ஜிம் உள்ளிட்ட உடற்பயிற்சி கூடங்கள், தியேட்டர்கள் ஆகியவற்றை, வருகிற 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்படுவதாக அறிவித்தனர்.


அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டிருக்கும் மத்திய அரசு, பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்களில், கூடுமானவரை, நெருக்கமாக நிற்பதை, உட்காருவதை தவிர்த்து, குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு அமர்ந்து பயணிக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறது.


நாடு முழுவதும், ராணுவ தளங்கள் உள்ள பகுதிகளில், கொரோனா தனிமைப்படுத்துதல் மையங்களை ஏற்படுத்தி, சுமார் 15,000 பேருக்கு சிகிச்சையளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


நாட்டில், தொல்லியல் துறைக்குச் சொந்தமான தேசிய நினைவகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை, வருகிற 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.


வீட்டிலிருந்தே மேற்கொள்ள கூடிய பணிகளை செய்வதற்கு, தனியார் நிறுவனங்கள் அனுமதிக்குமாறும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


கொரோனா பாதித்த நாடுகளிலிருந்து தாயகம் திரும்புவோர், பன்னாட்டு சுற்றுலா பயணிகளின் தேவைக்காகவும், 24 மணி நேரமும், இயங்கும் கொரோனா கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.


ஐரோப்பிய நாடுகள், துருக்கி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வருவதற்கான தடை புதன்கிழமை முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது.


கொரோனா அறிகுறி மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்ளவும், உதவிகள் கோரவும், 1075 என்ற புதிய உதவி எண்ணை மத்திய அரசு அறிவித்துள்ளது.