பாலியல் தொல்லைகள் தடைச் சட்டம் - தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது: நீதிமன்றம்.

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் (பிப்ரவரி 22) தெரிவித்துள்ளது..


சென்னையில் உள்ள வணிக சின்னம் மற்றும் புவிசார் குறியீடு அலுவலகத்தில் துணை பதிவாளராகப் பணியாற்றியவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே அலுவலகத்தில் உதவி பதிவாளராகப் பணியாற்றிய பெண் ஒருவர் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்த அலுவலகத்தில் உட்புகார் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் விசாரணை நியாயமாக இருக்காது என்று அந்தப் பெண் தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.


இதன் அடிப்படையில், தனி விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மாவட்ட சமூகநல அதிகாரி தலைமையிலான குழு நடத்திய விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட துணைப் பதிவாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி அலுவலகப் பதிவாளருக்குப் பரிந்துரைக்கப்பட்டது..


இதனிடையே அந்தப் பெண் சார்பில், அலுவலகத் துறை பதிவாளர் அமைத்த விசாரணைக் குழுவைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரி மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தீர்ப்பாயம், சமூக நலத் துறை அதிகாரி தலைமையிலான குழு விசாரணையை முடித்துவிட்டதாகத் தெரிவித்து, துறை பதிவாளர் அமைத்த விசாரணை குழு சட்டவிரோதமானது என்று உத்தரவிட்டது.


இந்த உத்தரவை எதிர்த்தும், சமூக நலத் துறை விசாரணை நடவடிக்கையை எதிர்த்தும் குற்றம்சாட்டப்பட்ட துணைப் பதிவாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது..


அப்போது, “பணியிடங்களில் வேலை வாங்குவதற்காக வரம்பு மீறி திட்டுவது என்பது பாலியல் தொல்லை தடைச் சட்டத்தின் கீழ் குற்றமாகாது” என்று கூறிய நீதிபதிகள், மத்திய நிர்வாகத் தீர்ப்பாய உத்தரவையும், சமூக நலத் துறை குழுவின் விசாரணை அறிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட்டனர்.


மேலும், பொய்ப் புகார் அளிப்பவர்களுக்கு எதிராக நட வடிக்கை எடுக்க, பாலியல் தொல்லைகள் தடைச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதையைக் காக்கக் கொண்டு வரப்பட்ட சட்டத்தைக் கற்பனையான குற்றச்சாட்டுகளால், தவறாகப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்...


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்