ஆசிரியை அடித்ததால் பறிபோன மாணவனின் கண் பார்வை

சென்னையில் அரசுப் பள்ளியில் ஆசிரியை அடித்ததில் மாணவனின் கண் பார்வை பறிபோனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர்கள் ரேகா - வேலு தம்பதி. இவர்களின் 13 வயது மகன், மேடவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.


கடந்த மாதம் வகுப்பறையில் தமிழ் ஆசிரியை இரும்பு ஸ்கேலால் மாணவனின் தலையில் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், தொடர்ந்து தலைவலிப்பதாக கூறிய மாணவனை பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்த போது, கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


எழும்பூர் கண் மருத்துவமனையில் மாணவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், நரம்பில் பாதிப்பு இருப்பதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ளான்.


கண்ணில் அறுவை சிகிச்சை செய்துள்ள போதிலும், தலையில் நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதால் மாணவனுக்கு பார்வை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவரது தாய் வேதனை தெரிவித்துள்ளார்.


மாணவனை ஆசிரியை இரும்பு ஸ்கேலால் தாக்கியதாக கூறப்படும் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்க முயன்றபோது, சம்மந்தப்பட்ட அரசுப் பள்ளி தரப்பில் உரிய விளக்கம் அளிக்க முன்வரவில்லை. இதனிடையே மேடவாக்கம் அரசுப் பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.