கொரோனா வைரஸ்: ஆஸ்திரேலியா டூ டெல்லி - மொழி தெரியாமல் தலைநகரில் தவிக்கும் விழுப்புரம் தம்பதி

கொரோனா வைரஸ்: மொழி தெரியாமல் தலைநகரில் தவிக்கும் தமிழக தம்பதி


ஆஸ்திரேலியாவில் உள்ள தனது மகன் சத்யராஜை காண தமிழகத்தின் விழுப்புரத்தில் இருந்து சென்ற தம்பதி, தாயகம் திரும்பும்போது ஊரடங்கு உத்தரவு அமல் காரணமாக டெல்லியில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான பர்குணன்(62), தனது மனைவி சாந்தியுடன் (60) சென்னை வழியாக கடந்த ஆண்டு டிசம்பர் 29-ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு சென்றார். அவர்களின் ஆஸ்திரேலிய நுழைவு அனுமதி (விசா) காலம் மார்ச் 23-ஆம் தேதிவரை இருந்தது.


இருவரும் மார்ச் 20-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லி வழியாக சென்னைக்கு திரும்ப பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்தனர்.


விமான நிலையத்தில் பரிசோதனை
டெல்லியில் சிக்கிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்கின்றனர்.


டெல்லியில் சிக்கிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், டெல்லி விமான நிலையத்துக்கு கடந்த 21-ஆம் தேதி வந்த தம்பதி, வெளிநாட்டில் இருந்து வந்த இந்தியர்களாக வகைப்படுத்தப்பட்டு, கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.


முடிவுகள் வர இரண்டு நாட்கள் ஆகும் என்பதால், நொய்டாவில் தற்காலிக சுகாதார நிலையமாக மாற்றப்பட்ட மாணவர் விடுதியில் தங்க வைக்க இருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.


இருவருக்கும் வைரஸ் அறிகுறி இல்லை என்பதை அதிகாரிகள் மார்ச் 23-ஆம் தேதி உறுதிப்படுத்தினர். ஆனால், ஏற்கெனவே வைரஸ் பரவல் தொடர்பான கட்டுப்பாடுகள் நொய்டா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் அமலில் இருந்தன. இதனால் விடுதிகள் ஏதும் இயங்காத நிலையில், இருவரும் மேலும் ஒரு நாளை அந்த விடுதியில் கழித்தனர்.


கொரோனா தொற்று குறித்த முக்கிய சந்தேகங்களும், அதற்கான பதில்களும்
கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் எப்படி சிகிச்சையளிக்கிறார்கள் மருத்துவர்கள்?
கொரோனா: உலக நாடுகளின் அச்சமும், பின்பற்றும் வழிமுறைகளும்


இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி மார்ச் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் தேசிய அளவிலான ஊரடங்கு 21 நாட்களுக்கு அமலுக்கு வரும் அறிவிப்பை கடந்த புதன்கிழமை வெளியிட்டார்.


இதனால் நொய்டாவை விட்டு வர முடியாதவர்களாகவும், வேறு எங்கும் செல்ல முடியாத நிலைக்கும் பர்குணன், சாந்தி தம்பதி தள்ளப்பட்டனர்.


ஆஸ்திரேலியாவில் உள்ள தங்களுடைய மகனை தொடர்பு கொண்டு நிலையை விவரித்த பிறகு, பொதுவான நண்பர் ஒருவர் மூலம் விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் ரவிக்குமாரை இருவரும் தொடர்பு கொண்டனர்.


தொகுதியில் இருந்த அவர், இருவரையும் பாதுகாப்பாக தங்க வைக்க ஏற்பாடு செய்ய அதிகாரிகள் மூலம் முயற்சி மேற்கொண்டார்.


இந்த நிலையில், உத்தர பிரதேச காவல் பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் கெளதம் புத்த நகர் துணை ஆணையராக இருப்பதை அறிந்து அவரது உதவியை ரவிக்குமார் கோரினார்.


இதையடுத்து, விழுப்புரம் தம்பதிக்கு வைரஸ் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழை அளித்த அதிகாரிகள், அங்கிருந்து விடுவிக்கப்படும் கடிதத்தையும் கொடுத்தனர்.


விழுப்புரம் தம்பதி
அதில் சுகாதார நடைமுறைகளின்படி 14 நாட்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், அதற்குள்ளாக இருமல், தும்மல் போன்ற அறிகுறி தென்பட்டால் மருத்துவர்களிடம் காண்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.


இந்த நிலையில், சமீபத்தில் தனக்கு ஒதுக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கான குடியிருப்பில் விழுப்புரம் தம்பதியை தங்க வைக்க முடிவெடுத்த ரவிக்குமார் எம்.பி, இருவரையும் நொய்டாவில் இருந்து டெல்லிக்கு அழைத்து வர உதவுமாறு காவல்துறை அதிகாரி ராஜேஷை கேட்டுக் கொண்டார்.


அதன்படி, காவலர்களின் பாதுகாப்புடன் டெல்லி நார்த் அவென்யூவில் உள்ள தமது குடியிருப்புக்கு அந்த தம்பதி அழைத்து வரப்பட்டனர்.


இது குறித்து பர்குணன், சாந்தி ஆகியோரை தொடர்பு கொண்டு பிபிசி பேசியபோது, தங்களின் அனுபவத்தை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.


"இந்தியாவில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருவதை அறிந்தோம். என்ன செய்வதென்றே தெரியவில்லை.


நல்ல வேளையாக டெல்லிக்கு எங்களை அழைத்து வந்து விட்டார்கள். இல்லையென்றால், வைரஸ் பாதிப்புள்ளவர்கள் அங்கு ஒருவேளை இருந்திருந்தால், அவர்கள் மூலம் எங்களுக்கும் வைரஸ் பரவியிருக்கும்" என்று பர்குணன் கூறினார்.


டெல்லியில் சிக்கிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த ஊருக்கு நடந்து செல்கின்றனர்
டெல்லி விமான நிலையத்துக்கு வந்த இருவரும் ஏன் நொய்டா மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள் என கேட்டபோது, "எங்களுக்கு தமிழ் மட்டுமே தெரியும், ஆங்கிலம் ஓரளவுக்கு புரியும். அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு நாங்கள் அளித்த பதிலை தவறுதலாக புரிந்து நொய்டாவுக்கு அழைத்து வந்து விட்டனர்" என்று சாந்தி தெரிவித்தார்.


"எங்களுக்கு வைரஸ் பரவலோ, அறிகுறியோ இல்லை. ஆனால், சொந்த ஊருக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இங்கு முன்பின் அறிமுகமானவர்கள் இல்லை. எவ்வளவு நாட்களுக்கு இருப்போம் என தெரியவில்லை.


நொய்டாவில் எங்களை போல வைரஸ் பாதிப்பு இல்லாத பலர் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் டெல்லிக்கு வந்து விட்டோம்" என்று அந்த தம்பதி தெரிவித்தனர்.


"எங்களை எப்படியாவது சொந்த ஊருக்கு அழைத்து செல்ல தமிழக அரசும், மத்திய அரசும் உதவ வேண்டும். விழுப்புரம் எம்.பியும் காவல்துறை அதிகாரிகளும் உதவியதால்தான் இங்குவரை வர முடிந்தது.


இல்லையென்றால் எங்கள் நிலை என்னவாகும் என்றே தெரியவில்லை, நினைத்துப்பார்க்கவே அச்சமாக உள்ளது" என்று இருவரும் கூறினர்.


விழுப்புரம் எம்.பி ரவிக்குமாரிடம் பிபிசி பேசியபோது, நடந்த சம்பவங்களை அவரும் உறுதிப்படுத்தினார்.


" காவல்துறை அதிகாரி ராஜேஷ் உதவியுடன் இப்போதைக்கு இருவரையும் டெல்லிக்கு வரவழைத்து, எனது குடியிருப்பில் தங்க வைத்துள்ளேன். டெல்லியில் உள்ள நண்பர்கள் மூலம் இருவருக்கும் உணவுக்கு ஏற்பாடு செய்துள்ளேன். ஊரடங்கு முடிந்து விழுப்புரம் திரும்பும்வரை அவர்கள் அங்கு தங்கியிருப்பார்கள்" என்று ரவிக்குமார் தெரிவித்தார்.


பர்குணன், சாந்தி தம்பதியை தொகுதிவாசிகள் என்ற முறையில் விழுப்புரம் எம்.பி ஆதரிக்கலாம். ஆனால், வைரஸ் பரவவில்லை என உறுதிப்படுத்தப்படும் மற்ற மாநில பயணிகள், ஊரடங்கு அமலில் உள்ள நாட்டில், அடுத்து எங்கு செல்வார்கள், எங்கு தங்குவார்கள், எவ்வாறு 14 நாட்களுக்கு தங்களை தனிமைப்படுத்திக் கொள்வார்கள்?


அவர்களின் நலன்களுக்கு யார் பொறுப்பு? யார் அவர்களை கண்காணிப்பார்கள்? போன்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. இவற்றுக்கு பொறுப்பில் உள்ள அதிகாரிகள் தரப்பில் இருந்து உரிய பதில்கள் கிடைக்கவில்லை.


மொழியும், ஆதரவும் இல்லாத தலைநகரில், இன்னும் எவ்வளவு காலத்துக்கு தங்குவோம் என்பது அறியாமல் இரண்டு இரவுகளை பர்குணன், சாந்தி தம்பதி கழித்துள்ளார்கள்.


நிச்சயமற்ற நிலையுடன், அடுத்து தங்கப்போகும் நாட்களையும் ஆள்அரவமற்ற நிலைக்கு செல்லும் டெல்லியில் கழிக்க, விழுப்புரம் தம்பதி மனதளவில் தயாராகி வருகிறார்கள்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்