கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சீனாவை விஞ்சிய ஜெர்மனி... எப்படி சாத்தியமானது...

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை, தீரத்துடன் எதிர்கொண்டு உயிரிழப்புகளை கடுமையாக குறைத்து, பிற நாடுகளின் புருவங்களை உயர வைத்துள்ளது ஜெர்மனி. 


கொரோனா உருவான சீனாவில் இதுவரை 3255 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக வல்லரசான அமெரிக்காவில் சுமார் 20 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 275பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகள் கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகின்றன.


ஆனால் ஜெர்மனி மட்டும் கொரோனா உயிரிழப்புகளை கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளது.இதுவரை ஜெர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 20 ஆயிரம் பேரில் உயிரிழந்தவர்கள் 68 பேர் மட்டுமே. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் 4வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி, உயிரிழப்பு எண்ணிக்கையில் 10வது இடத்தில் உள்ளது.


பிரிட்டன் முழுவதும் உயிர் காக்கும் மருத்துவ கருவிகளுடன் 4 ஆயிரம் படுக்கைகள் மட்டுமே உள்ளன. பிரான்சில் 7ஆயிரம் படுக்கைகளும், இத்தாலியில் 5 ஆயிரம் படுக்கைகளும் உள்ளன. கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் சுவாசக்கோளாறு ஏற்பட்டே உயிரிழக்கின்றனர்.


இத்தாலி, ஸ்பெயின், பிரான்சில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், உயிர் பிழைக்கும் வாய்ப்புள்ள நோயாளிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.


இதனால்உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன. ஆனால் ஜெர்மனியில் உயிர்காக்கும் மருத்துவ கருவிகளுடன், 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அந்த வசதி கிடைக்கிறது. 


ஜெர்மனியில் அரசு ஆய்வகங்கள் மட்டுமின்றி தனியார் ஆய்வகங்களிலும் கொரோனா பரிசோதனைக்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாளொன்றுக்கு சுமார் 12 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள் சோதிக்கப்படுகின்றன.


காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்ட உடனே ரத்தமாதிரிகள் பரிசோதனை செய்யப்படுவதால், ஆரம்ப கட்டத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.


இதனால் கொரோனா பரவுவது தடுக்கப்படுவதுடன், உயிரிழப்பும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், இதுவரை அந்நாட்டில் எந்த நகரமும் சீல் வைக்கப்படவில்லை.  


அதேநேரத்தில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும், ஜெர்மன் மருத்துவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.  அவர்களது கண்டுபிடிப்பு விரைவில் மனிதகுலத்தை மீட்டெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு