கொரோனாவால் இத்தாலியில் ஒரே நாளில் 800 பேர் வரை உயிரிழப்பு...

கொரோனாவின் பிறப்பிடமாக சீனா கருதப்பட்டாலும், அதன் தாக்கம் என்னவோ இத்தாலியைச் சூறையாடி வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 800 பேர் வரை உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இத்தாலியில் கொரோனா தொற்று நோய்க்கு ஏறத்தாழ 54 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 6 ஆயிரத்து 500 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஏற்கனவே அங்கு 4 ஆயிரத்து 800 பேர் பலியாகி உள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் கிட்டத்தட்ட 800 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கடந்த 4 நாட்களில் மட்டும் அந்நாட்டில் 2 ஆயிரத்து 500 பேர் வரை கொரோனாவால் மரணித்துள்ளனர்.


சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 3 புள்ளி 9 சதவீதத்தினரே உயிரிழந்த நிலையில், வளர்ச்சியடைந்த நாடான இத்தாலியில் 8 புள்ளி 5 சதவீதம் பேர் அந்த வைரஸுக்கு பலியாகியுள்ளனர்.


இதற்கு, அந்த நாட்டினரின் சராசரி வயது அதிகமாக இருப்பது காரணமாகக் கூறப்படுகிறது. இத்தாலியில் 22 புள்ளி 6 சதவீதம் பேர் 65 வயதுக்கும் மேற்பட்டவர்ளாக இருப்பதால் அங்கு மரணம் கட்டுக்கடங்காமல் போவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இத்தாலியில் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் பாவ்லொ மால்டினியும், அவரது மகனுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயினில் ஏற்கனவே ஆயிரத்து 300க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 285 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.


இதேபோல் ஈரானில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருந்த நிலையில் நேற்று மட்டும் 123 பேர் தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக பிரான்ஸில் 14 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மட்டும் 112 பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.