பாண்டேவின் ‘சாணக்யா’ விருதைப் புறக்கணிக்கும் தோழர் நல்லகண்ணு - ‘கொள்கையில் சமரசமில்லை’ என அறிவிப்பு!

ரங்கராஜ் பாண்டே வழங்கும் சாணக்யா விருதை நல்லகண்ணு ஏற்கமாட்டார் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியாளர் ரங்கராஜ் பாண்டே கடந்தாண்டு தான் பணியாற்றிய ஊடகத்தில் இருந்து வெளியேறி புதிதாக ‘சாணக்யா’ என்ற செய்தி வழங்கும் இணையதள நிறுவனத்தைத் தொடங்கினார்.


அந்த செய்தி நிறுவனம் தொடங்கி முதலாம் ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி விழாவிற்கு ஏற்பாடு செய்த ரங்கராஜ் பாண்டே, தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அரசியல் தலைவர்களுக்கு ‘சாணக்யா விருது’ வழங்கப்போவதாக அறிவித்திருந்தார்.


அந்த விருதை பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோருக்கு வழங்குவதாக அறிவித்திருந்தார். இந்த மூன்று தலைவர்களுமே வெவ்வெறு கருத்தியலைக் கொண்டுள்ளவர்கள். அவர்கள் மூன்று பேருக்கும் விருது அளிப்பது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் இந்த விருதை தோழர் நல்லகண்ணு புறக்கணிப்பதாக தகவல்கள் வெளியாகின.


பாண்டேவின் ‘சாணக்யா’ விருதைப் புறக்கணிக்கும் தோழர் நல்லகண்ணு - ‘கொள்கையில் சமரசமில்லை’ என அறிவிப்பு!


சுதந்தரபோராட்டக் காலத்தின்போதும், இந்தியா விடுதலை பெற்ற பிறகும் பல்வேறு போராட்டங்களையும், தற்போது இந்தியாவை ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசின் பாசிச போக்கை எதிர்த்தும், தமிழகத்தை ஆளும் ஆ.தி.மு.க அரசை எதிர்த்தும் 94 வயதான தோழர் நல்லகண்ணு போராடி வருகிறார்.


அவருக்கு வலதுசாரி கருத்தியல் உடைய ரங்கராஜ் பாண்டே விருது அளிக்க அறிவித்திருந்தது ஜனநாயக அமைப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


ரங்கராஜ் பாண்டே தொடர்சியாக பா.ஜ.கவின் திட்டங்களுக்கு ஆதரவாக, இந்துத்வா கருத்தியலைக் கொண்டு செயல்படுவதால் இந்த விருதை தோழர் நல்லகண்ணு புறக்கணிக்கவேண்டும் என கோரிக்கையும் வைத்தனர்.


இந்நிலையில் நிகழ்ச்சி இன்று நடைபெறும் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் தோழர் நல்லகண்ணு, ரங்கராஜ் பாண்டே வழங்கும் விருதைப் பெறமாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “என்பது ஆண்டுகளாக இலட்சிய உறுதியோடு வாழும் அய்யா நல்லகண்ணு அவர்கள், கொள்கை உறுதியோடு வாழும் இன்றைய தலைமுறையின் வழிகாட்டி.


நண்பர் ரங்கராஜ் பாண்டே அறிவித்துள்ள விருதினை அவர் ஏற்க மாட்டார். அதில் கலந்துகொள்ளமாட்டார். கொள்கையில் சமரசம் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். தோழர் நல்லகண்ணுவின் இந்த முடிவை ஜனநாயக அமைப்பினர் வரவேற்றுள்ளனர்