கடலூர் கலெக்டர் வீட்டில் 55 பவுன் நகைகள் கொள்ளை

கடலூர் மாவட்ட ஆட்சியர் வீட்டில் 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.


தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள நாடியம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெ.அன்புச்செல்வன். இவர் கடலூர் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வருகிறார். மேலும் குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறார். இவரது நாடியம் கிராமத்து வீட்டின் காவலுக்காக இதே ஊரைச் சேர்ந்த செல்வம் (62) என்பவர் தங்கியுள்ளார்.


இந்நிலையில், நேற்று இரவு செல்வம் வீட்டின் முன்பக்கம் படுத்திருந்தபோது, சில மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க சுற்றுச்சுவரை ஏறிக் குதித்து, வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்தவர்கள் சுமார் 55 பவுன் நகையைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.


மேலும் டிவி மற்றும் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா, சிசிடிவி ஆகியவற்றை எடுத்து வீட்டின் பின்பக்கமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.


இன்று காலை செல்வம் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைபட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்துள்ளார்.


இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உடனே தஞ்சையிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இந்த நாய் அங்கிருந்து அரை கிலோமீட்டர் தூரம் ஓடி அங்கேயே நின்றுவிட்டது.


கைரேகை நிபுணர் துணை கண்காணிப்பாளர் கலைக்கண்ணகி சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினார். தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் ராமச்சந்திரன் தடயங்களை பதிவு செய்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது