கறிக்கோழி கிலோ ₹5... ஆனாலும் வாங்க யாராலும் இல்லை... நெல்லை வியாபாரி வேதனை
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே புஷ்பவனம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் ராஜ். இவர் புண்ணியவான்புரம் கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளாக கறிக்கோழி பண்ணை நடத்தி வருகிறார்.
பல்லடம்இருந்து குஞ்சுகளை பெறும் அவர் தீவனம் போட்டு கோழிகளை வளர்த்து அதே நிறுவனத்திற்கு கோழிகளின் எடை அடிப்படையில் விற்பனை செய்து வருகிறார்.
அதோடு பணகுடியில் கோழி இறைச்சி கடை வைத்து அதன் மூலமும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் வைரஸ் பாதிப்பு கேரளாவில் பறவை காய்ச்சல் மற்றும் கொரோனா அச்சம் காரணமாக கறி கோழிகளின் விலை கிலோ 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலை வீழ்ச்சியடைந்து. தற்போது கோழி இறைச்சி 20 ரூபாய் என்ற நிலையை எட்டி உள்ளது.
அப்போதும் இறைச்சி கோழிகளை வாங்க பொதுமக்கள் முன்வரவில்லை. குஞ்சுகளை வளர்க்க கொடுத்த நிறுவனமும் கைவிரித்து விட்டது. இதனிடையே தினமும் ஐயாயிரம் ரூபாய் செலவழித்து 2000 கோழிகளை வளர்த்து வரும் அவரால் கோழிகளுக்கு தீவனம் வாங்கி போட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வேறுவழியின்றி கோழிகளை மிகக்குறைந்த விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்ட அவர் உயிருடன் கிலோ 5 ரூபாய்க்கும் கோழிக்கறி ரூபாய் 20க்கும் விற்க முடிவு செய்து இன்று காலையில் இருந்து விற்பனை செய்து வருகிறார்.
கடை விரித்தேன் கொள்வாரில்லை என்ற நிலையே காணப்படுகிறது. கறிக்கோழிகளை வாங்க பெரிய அளவில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை இதனால் மிகப்பெரிய இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார். இதே நிலையே தமிழகம் முழுவதும் தொடர்வதாக வியபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.