சிஏஏ போராட்டத்துக்கு எதிராக பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்தது சென்னை ஹைகோர்ட்.

சென்னை: அனுமதி இல்லாமல் திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் எந்த போராட்டமும் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய திரூப்பூர் காவல்துறைக்கு நேற்று பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.


குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், காவல்துறை அனுமதியின்றி திருப்பூரில் இஸ்லாமிய அமைப்புகள் கடந்த பிப்ரவரி 15ம் தேதி முதல் நடத்தும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை தடுக்க கோரி வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, தாங்கள் விருப்பப்படும் இடங்களில் போராட்டம் நடத்த பொதுமக்களுக்கு உரிமையில்லை என்றும், அனுமதியின்றி போராட்டங்கள் நடைபெறுவதை தடுக்க காவல் துறையினருக்கு எந்த தடையும் இல்லை என்றும் விளக்கமளித்தனர்.


மேலும், காவல்துறை அனுமதியில்லாமல் திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவோ, எதிராகவோ போராட்டங்கள் நடைபெறவில்லை என்பதை உறுதி செய்ய உத்தரவிட்டனர்.


இந்நிலையில், அமைதியான முறையில் போராடிவரும் தங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், அதை திரும்ப பெற வேண்டுமென வழக்கறிஞர்கள் வைகை, மோகன், என்.ஜி.ஆர்.பிரசாத், முபீன், ராஜா முகமது உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் முறையீடு செய்தனர்.


திருப்பூர் போராட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த கோபிநாத் மீது ஏற்கனவே குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் குற்றம் சாட்டினர். பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அனுமதியின்றி போராட்டம் தொடர்பான வழக்கில் நேற்று பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக தெரிவித்து வழக்கை மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


அன்றையதினம் அனைத்து தரப்பினரும் தங்களது வாதங்களை முன் வைக்கலாம் என நீதிபதிகள் நீதிபதிகள் அறிவுறுத்தினர். அப்போது அரசு வழக்கறிஞர் குறுக்கிட்டு அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்துபவர்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தங்கள் விளக்கத்தை பதிவு செய்யும்படி கேட்டுக்கொண்டார்.