தமிழ்நாடு கொரோனா நோயாளிகளுக்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க நடவடிக்கை

 


தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை வந்தால் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.


சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகனின் கேள்விக்கு பதில் அளித்த அவர், அரசு மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை இலவசமாகவே மேற்கொள்ளப்படுவதாகவும், தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.


தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகளை உருவாக்க, அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றை அரசு மருத்துவ குழு ஆய்வு செய்த பிறகு பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.


நோய் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள நபரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்த 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


தமிழகம் முழுவதும் 32 பேர் தனிமை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் யாருக்கும் கொரோனா நோய் அறிகுறிகள் இல்லை என்றும் கூறினார்.