ரயில்களில் பயணித்த பலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், வரும் 31-ம் தேதி வரை அனைத்து ரயில் சேவையையும் ரத்து
ரயில்களில் பயணித்த பலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், வரும் 31-ம் தேதி வரை அனைத்து ரயில் சேவையையும் ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், வெளிநாட்டுக்கே செல்லாதவர்களுக்கும் கொரோனா பரவியுள்ளது.
டெல்லியில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதேபோல, ஜபல்பூர் வரை செல்லும் கோட்மேன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த நால்வருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ரயில்வேத்துறை பயணிகளுக்கு எச்சரிக்கை அளித்தது. நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 400க்கும் மேற்பட்ட ரயில்கள் இயங்கிக்கொண்டு உள்ளன.
ரயில்களில் பயணித்தவர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதால், அனைத்து ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களை தூய்மைப்படுத்த ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதனால், இன்று ஓடிக்கொண்டிருக்கும் சுமார் 400 ரயில்கள் அந்தந்த ஊர்களுக்குச் சென்று சேர்ந்த பிறகு அங்கேயே நிறுத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அனைத்து ரயில் நிலையங்களும் கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
31-ம் தேதி மீண்டும் ரயில்வே போர்டு அதிகாரிகள் கூடி ரயில் சேவையை தொடங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான முறையான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட உள்ளது