உயர் நீதிமன்ற கிளைக்கு உட்பட்ட அனைத்து நீதிமன்றங்களின் இடைக்கால உத்தரவுகளும் ஏப்.30 வரை நீட்டிப்பு    

சென்னை உயர் நீதிமன்றத்தைப் போல், உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் ஏற்கெனவே பிறப்பித்த அனைத்து இடைக்கால உத்தரவுகளும் ஏப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:


தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் செயல்படாத நிலை உள்ளது.


இதனால் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி நிவாரணம் பெற முடியாத சூழல் உள்ளது. எனவே உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உட்பட்ட அனைத்து நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஏற்கெனவே பிறப்பித்த அனைத்து இடைக்கால உத்தரவுகளும் ஏப். 30 வரை நீட்டிக்கப்படுகிறது.


ஆக்கிரமிப்புகள் தொடர்பான அனைத்து நீதிமன்றங்களும் பிறப்பித்த உத்தரவுகள் ஏப். 30 வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட ஜாமீன், முன்ஜாமீன், பரோல் உத்தரவுகளும் ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுகிறது.


இடைக்கால உத்தரவுகள் நீட்டிக்கப்பட்டிருப்பதால் பாதிப்பு ஏற்பட்டதாக அரசு, தனிநபர் கருதினால் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம்.


இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.