வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதி: 3 விதமான நேரங்கள் - மத்திய அரசு புதிய அறிவிப்பு..
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டிலிருந்தே பணியாற்றலாம். மற்ற ஊழியர்கள் 3 விதமான நேரங்களில் பணிக்கு வரலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தும் ஒரே வார்த்தையாக கரோனா வைரஸ் மாறியுள்ளது. சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் இன்று உலக நாடுகளையே மிரட்டி வருகிறது. இதுவரை 8 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 2.50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலும் கரோனாவின் தொற்று தீவிரமடைந்துள்ளது. இந்திய அரசும் தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
வரும் 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் என மக்கள் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடுப்பு நடவடிக்கைகளையும் மீறி கரோனா வைரஸுக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளார்கள். 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் கூடுவதைத் தடுக்கும் வகையில் 169 ரயில்கள் வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த சூழலில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில், பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய பணியாளர் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
"மத்திய அரசில் உள்ள அனைத்து துறைகளிலும் குரூப் பி மற்றும் சி பிரிவு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டும் நாள்தோறும் பணிக்கு வந்தால் போதும் என்பதை அந்தந்தத் துறைகளின் தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். மீதமுள்ள 50 சதவீதப் பணியாளர்கள் வீட்டிலிருந்தே தங்கள் பணிகளைக் கவனிக்கலாம்.
ஒவ்வொரு துறையின் தலைவர்கள் வாரந்தோறும் குரூப் பி, சி ஊழியர்கள் யாரெல்லாம் அலுவலகத்துக்கு வந்து பணி செய்ய வேண்டும், யாரெல்லாம் வீட்டிலிருந்தவாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்த பணிக் குறிப்பேட்டைத் தயாரிக்க வேண்டும்.
மேலும் அலுவலகத்துக்கு அருகே வீடுகள் அமைந்திருக்கும் ஊழியர்கள், அதிகாரிகள் அனைவரும் தங்களின் சொந்த வாகனத்தில் பணிக்கு வருமாறு துறையின் தலைவர்கள் உத்தரவிட வேண்டும்.
அனைத்து ஊழியர்களுக்கும் பணி நேரம் என்பது ஒரே நேரமாக இல்லாமல் மூன்று வகையாகப் பிரித்து பணியாற்றச்சொல்லலாம். காலை 9 மணி முதல் 5.30 மணி வரையிலும், காலை 9.30 மணி முதல் 6 மணி வரையிலும், காலை 10 மணி முதல் 6.30 மணி வரையிலும் மூன்று வகையான நேரங்களில் பணியாளர்களை பணிக்கு வருமாறு கோரலாம்".
இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.