தொடரும் நல்ல செய்தி: 3வது நாளாக உள்நாட்டு கரோனா தொற்று சீனாவில் இல்லை; இறக்குமதி கரோனா தொற்று அதிகரிப்பு

கரோனா வைரஸ் தோன்றி உலகம் முழுதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் அது முதலில் தோன்றிய சீனாவில் தொடர்ச்சியாக 3வது நாளாக உள்நாட்டு புதிய கரோனா தொற்று கேஸ் ஒன்று கூட இல்லை. ஆனால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியான கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.


கரோனா மையமான ஹூபேயில் 7 பேர் மேலும் கரோனாவுக்குப் பலியானதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 3,255 ஆக அதிகரித்துள்ளது என்று சீனா சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.


கரோனா வைரஸுக்கு உலகம் முழுதும் பலி எண்ணிக்கை 11,397 ஆக அதிகரித்துள்ளது 2,75,427 பேர்களுக்கும் மேல் கரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர், சுமார் 160 நாடுகள் கரோனாவின் இரும்புப் பிடியில் இருந்து வருகின்றன.


சீனாவைக் கடந்து சென்ற இத்தாலியில் இதுவரை 4,000த்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.


சீனாவில் ஒட்டுமொத்தமாக உறுதி செய்யப்பட்ட கரோனா தொற்றுக்கள் 81,008. இதில் 3255 மரனங்களும், 6,013 நோயாளிகள் இன்னமும் சிகிச்சையில் உள்ளதும் அடங்கும். 71,740 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.


ஆனால் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் கரோனா தொற்று எண்ணிக்கை சீனாவில் 269 ஆக அதிகரித்துள்ளது.