காய்கறி வியாபரிகளின் களிவாணித்தனம்...! விவசாயிகள் வேதனை

விவசாயிகளிடம் வழக்கம் போல குறைந்த விலைக்கு காய்கறிகளை பெறும் வியாபாரிகள், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, பொதுமக்களிடம் இருமடங்கு விலைக்கு காய்கறிகளை விற்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சென்னை கோயம்பேடு சந்தைக்கு வழக்கம் போல காய்கறிகள் தடையின்றி லாரிகளில் கொண்டுவரப்படும் நிலையில், கொரோனாவைத் தடுக்க அமலில் உள்ள ஊரடங்கைப் பயன்படுத்தி, வழக்கத்தை விட இருமடங்கு விலைக்கு வியாபாரிகள் காய்கறிகளை விற்றுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


வெளி மாநிலங்களில் இருந்து எப்போதும் போல லாரிகள் அதே எண்ணிக்கையில் கோயம்பேட்டிற்கு வருகின்றன. ஒட்டன் சத்திரம் காய்கறிச் சந்தை அடைக்கப்பட்டு விட்டதால் அங்கிருந்தும் கூடுதலாக காய்கறி லாரிகள் சென்னைக்கு திருப்பிவிடப்படுகின்றன.


நிலைமை இப்படியிருக்க, லாரிகள் வரத்து குறைவு என்று உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து காய்கறிகளின் விலையை இருமடங்காக உயர்த்துவதாக வியாபாரிகள் மீது புகார் கூறப்படுகின்றது.


இங்கு காய்கறிகளுக்கு தட்டுப்பாடு என்பது போல வியாபாரிகள் கதை அளந்து கொண்டிருக்க, கரூர் அருகே ஒரு ஏக்கர் பசுமை குடிலில் விளைவிக்கப்பட்ட 500 கிலோ வெள்ளரிப் பிஞ்சுகளை வாங்கிச்செல்ல வியாபாரிகள் முன்வராததாலும், 31ந்தேதி வரை ஒட்டன்சத்திரம் சந்தை மூடப்பட்டதாலும்,


சென்னைக்கு எடுத்துச் செல்ல கூடுதல் வாடகை கேட்டதாலும் பறிக்கப்பட்ட மொத்த வெள்ளரி பிஞ்சுகளையும் குப்பை போல சாலையோரம் கொட்டும் பரிதாப நிலை ஏற்பட்டதாக வேதனை தெரிவித்தார் தண்ணீர் பாய்ச்சி பக்குவம் பார்த்து வளர்த்து வீதியில் கொட்டிய பாவப்பட்ட அந்த விவசாயி.


காய்கறி வியாபாரிகளின் வியாபாரத் தந்திரம் குறித்து விவசாயி ஒருவர் மிகுந்த வேதனையுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தங்களுக்கு எந்த காய்கறிக்கும் கிலோவுக்கு 15 ரூபாய்க்கு மேல் தருவதில்லை என்றும் இது போன்ற நேரத்திலாவது மக்களுக்கு உதவும் வகையில் நியாயமான விலையில் விற்கலாமே என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


 மக்களுக்கு இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில்தான் உதவிக்கரங்கள் நீள வேண்டும், எரிகிற வீட்டில் கிடைத்த வரைக்கும் லாபம் என்ற நோக்கில் கொள்ளை லாபத்துக்கு காய்கறிகளை விற்பதை தவிர்த்து நெருக்கடியான இந்த தருணத்திலாவது, வியாபாரிகள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு..


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்