காரைக்காலில் வாயில் துணியை வைத்து.. கொடூர தந்தை.. 25 ஆண்டு கடுங்காவல் தண்டனை!

புதுச்சேரி: காரைக்கால் அருகே வாயில் துணியை வைத்து மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தைக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.


நாகை மாவட்டம் கீச்சாக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(40). இவர் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி, 5 வயது மகளுடன் கடந்த சில ஆண்டுகளாக காரைக்கால் கோட்டுச்சேரி அருகே தனது மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இவரது மனைவி கும்பகோணத்தில் மீன் வெட்டும் பணியை செய்து வருகிறார். இதனால் தினமும் அதிகாலை கும்பகோணத்திற்கு சென்றுவிட்டு, மாலையில்தான் வீடு திரும்புவார். இதற்கிடையில் செல்வக்குமார் தொழிலுக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.


அப்போது தனது 5 ஆம் வகுப்பு படிக்கும் மகளை கடந்தாண்டு வாயில் துணியை வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அம்மாவிடம் தெரிவித்தால் உன்னை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளார்.


அதற்கு பயந்த சிறுமி யாரிடமும் தெரிவிக்காமல் இருந்துள்ளார். பின்னர் இங்கிருந்தால் ஏதாவது பிரச்னையாகி விடும் எனக்கருதி செல்வக்குமார் கேரளா மாநிலத்திற்கு தொழிலுக்கு சென்றுவிட்டார்.


பின்னர் வலி தாங்க முடியாமல் அந்த சிறுமி அழுதுள்ளார். இது குறித்து அவரது தாய் கேட்டபோது, நடந்த விபரத்தை தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.


இது குறித்து கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து கொடூர தந்தை செல்வக்குமாரை கைது செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைத்தனர்.


இந்த வழக்கு விசாரணை காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து சாட்சியங்கள் உள்ளிட்ட விசாரணைகள் முடிந்து இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.


குற்றம்சாட்டப்பட்ட செல்வக்குமாருக்கு, 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி கார்த்திகேயன் பரபரப்பு உத்தரவை வழங்கினார்.


மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு புதுச்சேரி அரசு ரூபாய் 4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்


இதையடுத்து செல்வக்குமாரை புதுச்சேரி அழைத்துச்சென்று மத்தியில் சிறையில் அடைத்தனர். சிறுமி பாலியல் வழக்கு விசாரணைகள் அனைத்தும் 6 மாதத்திற்குள்ளேயே முடித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.