234 இந்தியர்கள் ஈரானில் இருந்து தாயகம் திரும்பினர்!

உலகளவில் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சார்க் நாடுகளுடன் பிரதமர் மோடி இன்று (15/03/2020) ஆலோசனை நடத்தவுள்ளார்.


பிரதமர் நரேந்திர மோடி அழைப்பை ஏற்று சார்க் நாடுகளின் தலைவர்கள் இன்று மாலை 05.00 மணிக்கு காணொலியில் ஆலோசிக்க உள்ளனர்.


இந்த நிலையில் கரோனா பாதித்த ஈரான் நாட்டில் சிக்கித் தவித்த 234 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானத்தில் திரும்ப அழைத்து வரப்பட்டனர். இதனிடையே சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊர் திரும்பிய நபர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சளி, காய்ச்சல் இருந்ததால் இரண்டு பேர் திருவாரூர் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரையும் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.