கொரோனா பாதிப்பு, 22 ஆம் தேதி அதாவது நான்கே நாட்களில் 341 ஆக விஸ்வரூபமெடுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு 7-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 341-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக அளவாக, மகாராஷ்டிராவில் 63 பேரும், கேரளாவில் 52 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 27 பேரும், உத்தரபிரதேசத்தில் 25 பேரும், ராஜஸ்தானில் 24 பேரும், தெலங்கானாவில் 21 பேரும், கர்நாடகாவில் 20 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஹரியானாவில் 17 பேரும், குஜராத்தில் 14 பேரும், லடாக் மற்றும் பஞ்சாப்பில் 13 பேரும் கொரோனா தாக்கத்துக்கு உள்ளாகி உள்ளனர். தமிழகத்தில் 7 பேரும், சண்டிகரில் 5 பேரும், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், காஷ்மீர் மாநிலங்களில் தலா நால்வரும், ஆந்திரா மற்றும் உத்தரகண்ட்டில் மூவரும், ஒடிசா, இமாச்சல் பிரதேசத்தில் தலா இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி, மற்றும் சட்டீஸ்கரில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையில் 63 வயதான நபர் நேற்றிரவு உயிரிழந்தார். இதேபோல, கத்தார் சென்றுவந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான நபர், குஜராத் மாநிலத்தில் 65 வயதான மூதாட்டி ஆகியோர் இன்று உயிரிழந்தனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் முதன்முறையாக ஜனவரி 30 ஆம் தேதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பிப்ரவரி 3 ஆம் தேதி இது 3 ஆக உயர்ந்தது. அடுத்த 29 நாட்கள் இந்தியாவில் வேறு தொற்றும் கண்டறியப்படவில்லை. மார்ச் 5 ஆம் தேதி 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
கடந்த 18 ஆம் தேதியன்று 158 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, 22 ஆம் தேதி அதாவது நான்கே நாட்களில் 341 ஆக விஸ்வரூபமெடுத்துள்ளது. இது இருமடங்குக்கும் அதிகமான பரவல் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, 263 இந்திய மாணவர்கள், இத்தாலியின் ரோம் நகரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். டெல்லி விமான நிலையம் வந்தடைந்த 263 பேரும் சாவ்லாவில் உள்ள இந்தோ திபெத் எல்லை போலீசின் தனிமைப்படுத்துதல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த விமானத்தில் இருந்த ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவையை மார்ச் 31 வரை நிறுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை எதிர்கொள்வது குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவைச் செயலாளர் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.
அப்போது, கொரோனா வைரஸ் தாக்கம் உள்ள 75 மாவட்டங்களில் அத்தியாவசிய சேவைகளைத் தவிர மற்ற அனைத்து சேவைகளையும் நிறுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதில், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு, புதுச்சேரியில் மாஹி ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.ராஜஸ்தானைத் தொடர்ந்து, பஞ்சாப், சண்டிகர் பகுதிகள் மார்ச் 31 வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள், நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்துகொள்ளாமல், தங்களது தொகுதிகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.