போராட்டம் மற்றும் பேரணிக்கு ஏப்ரல் 21-ம் தேதி வரை அனுமதி அளிக்கக்கூடாது! -தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவு!

 


தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி வரை போராட்டங்கள் மற்றும் பேரணிக்கு அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும்  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது


குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும், ஆதரித்தும் தமிழகத்தில் பல பகுதிகளில் நடைபெறும் போராட்டங்களால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும்  போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாகவும், காவல்துறை அனுமதியில்லாமல் போராடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் இன்று  நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது போராட்டத்திற்கு ஆதரவாக மனு தாக்கல் செய்திருந்த வழக்கறிஞர்கள், ஜனநாயக அமைப்பில் போராட்டம் என்பது அடிப்படை உரிமை என வாதிட்டனர். அப்போது,  இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜராகியிருந்த தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜனிடம்,  போராட்டத்தின் தற்போதைய நிலை என்னவென்று  நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.


அதற்கு பதிலளித்த குற்றவியல் தலைமை வழக்கறிஞர், பெரும்பாலான இடங்களில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போரட்டங்கள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதகவும்,  தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டும் இன்னும் போராட்டம் தொடர்வதாகவும் தெரிவித்தார்.


அப்போது நீதிபதிகள்,  தற்போது கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க  பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு, மாநில அரசுகள் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.  எனவே,  இதனை அனைவரும் உரிய முறையில் கடைப்பிடிக்க வேண்டும் எனத்  தெரிவித்தனர்.


இதனையடுத்து,  தற்போதைய நிலையில் (கொரோனா பரவுவதைத் தடுக்க) பொது இடங்களில் அதிக அளவில் கூடி ஆர்ப்பாட்டம், போராட்டம் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு  காவல்துறையும் தமிழக அரசும் அனுமதி அளிக்கக் கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள்,  விசாரணையை ஏப்ரல் மாதம் 21- ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்