கடலூரில் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி!'- ஓய்வுக்கு 2 நாள்கள் இருந்த நிலையில் கைது

தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை பெண் அலுவலர் மற்றும் இடைத்தரகர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். பழைய இரும்பு பொருள்களை வாங்கி விற்கும் வியாபாரியான இவரின் மூத்த மகள் தமிழரசிக்கு கடந்த 9-ம் தேதி திருமணம் நடைபெற்றது. அதையடுத்து தாலிக்குத் தங்கம் வழங்கும் நலத்திட்டத்தில் பதிவு செய்வதற்காக விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்று, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.


அந்த விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட சமூக நலத்துறை விரிவாக்க அதிகாரியான ஜெயபிரபா, கோவிந்தராஜிடம் லஞ்சமாக ரூ.4,000 கேட்டிருக்கிறார். அதற்கு, 'அவ்வளவு பணம் என்னால் தர முடியாது. குறைத்துக் கேளுங்கள்' என்று கூறிய கோவிந்தராஜிடம், 200 குறைத்துக்கொண்டு 3,800 ரூபாய் கொடுங்கள் என்று அதிகாரி ஜெயபிரபா கறார் காட்டியதாகத் தெரிகிறது.


வேறு வழியின்றி கையில் வைத்திருந்த 800 ரூபாயை முன்தொகையாகக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் கோவிந்தராஜ். அதையடுத்து மீதித் தொகை 3,000 ரூபாயைக் கொடுத்தால்தான் விண்ணப்பத்தை பரிசீலிப்பேன் என்று கோவிந்தராஜை ஜெயபிரபா தொல்லை செய்ததாகக் கூறப்படுகிறது.


அதனால் மன உளைச்சலுக்கு ஆளான கோவிந்தராஜ், கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார். அதையடுத்து ரசாயனம் தடவப்பட்ட 3,000 ரூபாயை கோவிந்தராஜிடம் கொடுத்தனுப்பியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை. அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்ற கோவிந்தராஜ், கார்த்திக் என்ற இடைத்தரகர் மூலம் ஜெயபிரபாவிடம் கொடுத்திருக்கிறார்.


அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஜெயபிரபாவிடம் பணம் சென்று விட்டது என்பதை உறுதிப்படுத்தியவுடன் அவரைக் கையும் களவுமாகக் கைது செய்தனர். அவருடன் இடைத்தரகரான கார்த்தி என்பவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டிருக்கும் ஜெயபிரபா வரும் 29ம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..