தமிழ் உள்ளவரை தமிழகம் உள்ளவரை பேராசிரியர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

பேராசிரியர் ஒரு சகாப்தம்நெடிய உயரம்; சிவந்தமேனி; நேர்கொண்ட பார்வை; நிமிர்ந்த தோள்கள்; யாருக்கும் வளைந்து குனியாத தலை; எடுப்பான குரல் _ அவர்தான் பேராசிரியர் க.அன்பழகன். தி.மு.கழகத்தின் பொதுச்செயலாளர்.


*_பிறந்த ஊர் திருவாரூர் அருகிலுள்ள காட்டூர்; ஆண்டு 1922. அன்பழகனின் பெற்றோர் மணவழகர் என்கிற கல்யாணசுந்தரம் சொர்ணத்தம்மையார். இவர்களது ஐந்து வாரிசுகளில் மூத்தவர்தான் அன்பழகன். இயற்பெயர் ராமைய்யா. கல்யாணசுந்தரம் பெரியாரின் தீவிர பற்றாளர். காங்கிரஸ் சார்பாக பெரியார் கதர் இயக்கத்தைப் பரப்பியபோது, மயிலாடுதுறையில் கதர் விற்பனைக்கென்றே தனி கடை நடத்தினார்._*


சிதம்பர விஜயம்!


1925-ல் பெரியார் காங்கிரஸை விட்டு விலகியபோது, கல்யாணசுந்தரமும் விலகினார். பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோன்றுவித்த போது, கல்யாணசுந்தரமும் அதில் தொண்டரானார்.


பிள்ளைகளின் படிப்பை முன்னிட்டு 1939-ல் மயிலாடுதுறையிலிருந்து சிதம்பரத்துக்குக் குடிபெயர்ந்தார் கல்யாண சுந்தரம். தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்னும் நீதிக் கட்சியின் தலைமைப் பொறுப்பை பெரியார் ஏற்றபோது, கல்யாண சுந்தரமும் நீதிக்கட்சி அமைப்பை சிதம்பரத்தில் தொடங்கினார். அதில் சேர்ந்த 20 உறுப்பினர்களில் ராமைய்யாவும் ஒருவர்.


நீதிக்கட்சி சார்பில் சிதம்பரத்தில் கல்யாணசுந்தரம் ஏற்பாடு செய்யும் கூட்டங்களில் பெரியார், அண்ணா, சி.பி. சிற்றரசு, பொன்னம்பலனார் போன்ற முக்கிய தலைவர்கள் கலந்து கொள்வர். கூட்டம் முடிந்தபிறகு, கல்யாண சுந்தரம் வீட்டில்தான் இரவு ஓய்வு. அந்தத் தலைவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ராமைய்யாவுக்குக் கிடைத்தது. இது தவிர, ராமைய்யாவின் தந்தை, இயக்க இதழ்களின் முகவராக இருந்ததால், அந்த இதழ்களைப் படித்து... தனது தீப்பந்த எண்ணங்களுக்கு ராமைய்யா பெட்ரோல் போட்டுக்கொண்டார்.


தமிழுணர்வு!


1939-ல் இன்டர்மீடியெட்டில் அண்ணாமலைப் பல்கலையில் சேர்ந்தார் ராமைய்யா. மறைமலையடிகளாரின் தனித்தமிழ் இயக்க ஈடுபாட்டால் தன் பெயரை அன்பழகன் என்று மாற்றிக் கொண்டார். இவரது தந்தையும் தன் பெயரை மணவழகன் என்று மாற்றிக் கொண்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவரது தமிழுணர்வுக்குத் தீனிபோட்டது.


சிதம்பரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் அதிகம். சுயமரியாதை இயக்கம் அப்போதுதான் வேர்பிடிக்க ஆரம்பித்திருந்த காலம். அந்தக் காலக் கட்டத்தில் பாடவேளை, உறங்கும் நேரம் தவிர, பல்கலையின் ஏதேனும் ஒரு மூலையில் அன்பழகனின் குரல் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும். சுற்றிலும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் தோழர்கள்... நடுவில் அன்பழகன். காங்கிரஸ் எதிர்ப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு என்று இவரது நாக்கு போர் வாளாய்ச் சுழலும்.


சுற்றிப் பகைவர் கோடி சூழினும் சூறைக் காற்றாய்ச் சுழலும் அவரது சொற்போர் பலரை சுயமரியாதை இயக்கத்தவர்களாய் மாற்றியது. பல்கலையில் சுயமரியாதை இயக்கம் வேர்பிடித்து, விழுது விட்டு வளரத் தொடங்கியது. அதன் பிறகு தான் அங்கே திராவிட மாணவர் கழகம் உருவாகும் நிலை ஏற்பட்டது. படிப்படியாக அன்பழகன் திராவிட இயக்கத்தின் நட்சத்திரப் பேச்சாளராக உருவானார்.


அந்த இளைஞர்!


பல்கலைக் கழகத்தில் ‘தமிழ் இலக்கிய மன்றம்’ சார்பாக அறிஞர் அண்ணாவை சிறப்புப் பேச்சாளராக அன்பழகன் அழைத்தபோது, பலத்த எதிர்ப்பு. அண்ணா வந்தார். ‘ஆற்றோரம்’ என்ற தலைப்பில் அருவித் தமிழில் அவர் பேசியபோது, எதிர்த்தவர்கள் தலை குனிந்தார்கள்.


இந்தக் கால கட்டத்தில்தான் திருவாரூரில் தமிழ் மாணவர் மன்றம் வைத்திருந்த இளைஞர் ஒருவர் அன்பழகனை திருவாரூருக்குப் பேச அழைத்தார். அன்பழகனும் நெடுஞ்செழியனும் அங்கு சென்று பேசினர். கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த அந்த இளைஞரின் பெயர் மு.கருணாநிதி.


பச்சையப்பன் கல்லூரியில்...


1944_ம் ஆண்டு நீதிக்கட்சி திராவிடர் கழகமாகப் பெயர் மாற்றம் பெற்று அசுர வளர்ச்சி கண்டது. அன்பழகன் முன்னணிப் பேச்சாளராகத் தமிழகம் முழுக்க கொள்கை முழக்கம் செய்தார்.


இந்த ஆண்டில் அன்பழகன் எம்.ஏ. தேர்வு பெற்று பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார். பேராசிரியர் வகுப்பு நடத்துவதே தனியழகு. அது ஒரு திராவிடர் இயக்கக் கருத்தரங்கு மாதிரி இருக்கும். இவர் வகுப்பெடுக்கும்போது வேறு துறையைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்புக்கு வெளியே நின்று இவரது தமிழ்ச் சாரல் பேச்சை ரசிப்பார்கள். பணியில் இருந்து கொண்டே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கட்சியின் பிரசாரக் கூட்டங்களிலும் கலந்து கொண்டார்.


அன்பழகனின் இல்வாழ்க்கைத் துணைவி ஜெயலக்ஷ்மி. 1945-ல் பெரியார் தலைமையில் திருமணம். தமிழுணர்வு காரணமாக ஜெயலக்ஷ்மி வெற்றிச்செல்வியானார். வாழ்க்கைத் துணையாக மட்டுமின்றி, இயக்கத்தின் போராட்டங்களிலும் கலந்துகொண்டார் வெற்றிச் செல்வி.


எம்எல்ஏ.!


1949-ல் அண்ணா தி.மு.கழகத்தை தொடங்கியபோது, அன்பழகனும் அதில் பங்கு கொண்டு கட்சிப் பிரசாரக் கூட்டங்கள், மாநாடுகளில் பங்கேற்றார். 1957-ல் அண்ணாவின் விருப்பப்படி சட்டமன்றத் தேர்தலில் குதித்து எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். என்றாலும் பேராசிரியர் என்ற அடைமொழியை பச்சையப்பன் கல்லூரி இவர் மீது பச்சை குத்திவிட்டது.


அதன்பிறகு, தி.மு.கழக தொழிற்சங்கச் செயலாளர், மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் நல்வாழ்வுத்துறை, கல்வித்துறை அமைச்சர் என்று பல பதவிகள் இவரைத் தேடி வந்தன. ஆனால், அந்தப் பதவிகளையெல்லாம் விட, பேராசிரியருக்கு மகிழ்ச்சியூட்டும் பதவி தி.மு. கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற பதவிதான்.


தியாகம்!


பேராசிரியரின் நெடிய அரசியல் வாழ்வு பதவி நிழல்களை மட்டுமல்ல; தியாக வெப்பத்தையும் தாங்கி நிற்பது.


நேருவுக்கு கறுப்புக்கொடி, விலைவாசி உயர்வு கண்டனப் போராட்டம், இந்தி எதிர்ப்பு மறியல் போர், இந்திரா காந்திக்குக் கருப்புக் கொடி, அரசியல் சட்ட எரிப்புப் போர் என்று பல போராட்டங்களில் கலந்துகொண்டு மாதக் கணக்கிலெல்லாம் இவர் சிறைக் கம்பிகளுக்குள் வாழ்ந்திருக்கிறார்.


இது தவிர, 1983_ல் ஈழத் தமிழர் பிரச்னைக்காக எம்.எல்.ஏ. பதவியை கலைஞருடன் இணைந்து இவரும் ராஜினாமா செய்தார். சட்ட எரிப்புப் போராட்டத்தில் இவர் உட்பட பத்துப்பேரின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டது.


எளிய வாழ்க்கை!


இவர் ஆடம்பரத்தில் அக்கறையற்றவர். ஆங்கில மருந்துகளைவிட, சித்த மருந்துகளின் மீது ஆர்வம். தினமும் உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வார். யோகாசனத்திலும் ஈடுபாடு உண்டு. எவர் உரிமையிலும் தலையிட மாட்டார்; தன் உரிமையையும் விட்டுத்தரமாட்டார். துணைவி வெற்றிச்செல்வி காலமானதால் இரண்டாவது மனைவியாக சாந்தகுமாரியை கைப்பிடித்தார்.


கட்சியில் கலைஞருக்கு பிரச்சார பீரங்கிகள் நிறைய உண்டு. ஆனால், கேடயம் ஒன்றே ஒன்றுதான். அது அன்பழகன். சில நேரங்களில் பீரங்கிகள் கலைஞர் மீதே திரும்பிச் சுட்டன. அந்த நெருக்கடியான நேரங்களிலும் இந்தக் கேடயம் தனது நண்பரும் தலைவருமான கலைஞரைப் பாதுகாத்தே வந்திருக்கிறது.


சம்பத் போனார்; எம்.ஜி.ஆர். போனார். நெருக்கடி நிலையின்போது பலர் கையெழுத்துப் போட்டு கட்சியை விட்டு விலகினர். பேராசிரியர் எந்தச் சூழலிலும் விலகினாரில்லை. உயிர் நண்பரும் தலைவருமான கலைஞரிடமிருந்து இவரைப் பிரிக்க பல்வேறு முயற்சிகள் நடந்த போதிலும் அவையெல்லாம் தோல்வியிலேயே முடிந்தன.


பேராசிரியர் பற்றி கலைஞர் கூறுவதைக் கேளுங்கள்.


‘இன்று நான் அறுபது லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாம் தி.மு.கழகத்தின் தலைவன். ஆறு கோடி மக்களுக்கான ஆட்சிக்கு முதல்வன் எனினும் கட்சியிலும் ஆட்சியிலும் எடுக்கும் முடிவுகள் எதுவாயினும் அவரது கருத்து என்னவென்று அறியாமல் செயல்பட்டதில்லை. இது, நான் அவரது வயதுக்கு அளிக்கும் மதிப்பு மட்டுமல்ல; அவரது அறிவுக்கு, ஆற்றலுக்கு, அனுபவத்திற்கு அண்ணாவிற்கு அடுத்து எனக்கு அண்ணனாக இருக்கிறார் என்பதற்காகவும்’ (1997)


கலைஞர் கூற்றில், பேராசிரியர் மீது என்ன ஒரு மரியாதை; அழுத்தமான நம்பிக்கை! அதனால்தான் இந்தமுறை அமைச்சரவையில் தன் பெயரிலான துறைக்கு (நிதி) தனது அண்ணணை அமைச்சராக்கி அழகு பார்க்கிறாரோ கலைஞர்?


அண்ணாவின் நம்பிக்கை!


அந்தக் காலத்தில் சென்னையில் அண்ணாவுக்கு வீடில்லை. காஞ்சியிலிருந்து சென்னை வரும்போதெல்லாம் அண்ணா, அன்பழகன் வீட்டில்தான் தங்குவார். அந்த அளவுக்கு அண்ணாவின் மனம் கவர்ந்தவர் அன்பழகன்.


1967-ல் தி.மு.க. ஜெயித்தவுடன், அண்ணாவைத் தேடி கட்சிக்காரர்கள் அலைகிறார்கள். அண்ணா எங்கிருக்கிறார் என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. அண்ணா இருந்த இடம் ஆஸ்பிரன் தோட்டத்திலிருந்த அன்பழகன் வீடு. அங்கு உட்கார்ந்து கொண்டு நிதானமாக அமைச்சர்கள் பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்தார் அண்ணா. பேராசிரியர் மீது அவர் வைத்திருந்த அழுத்தமான நம்பிக்கையின் அடையாளம்தான் இது.