ஏழைக்காக இரங்கும் மனிதநேயம்..

ஊரடங்கு உத்தரவால் பணமின்றி தவிப்போர் உணவுக்கு அல்லாடும் வேளையில், அவர்களுக்காக சென்னையில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் பணத்தை மொத்தமாக செலுத்தி பசியாறச் செய்கிறார் மனிதநேயமிக்க ஒருவர்...


தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சாலையோரக் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஓட்டல்களுக்கு செல்ல முடியாத பலர் குறைந்த விலையில் உணவு கிடைக்கும் அம்மா உணவகங்களை நாடுகின்றனர். அதிலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அம்மா உணவகத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் மக்கள் காத்திருக்கின்றனர். அவ்வாறு வந்திருந்தவர்களை வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார் விஸ்வநாதன் என்பவர்.


அவரிடம் பேசியபோது, கடந்த 3 நாட்களாக குறிப்பிட்ட அம்மா உணவகத்திற்கு வரும் நபர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருவதாகவும், அதற்குரிய தொகையை தங்கள் டிரஸ்ட் மூலமாக வழங்கி விடுவதாகவும் தெரிவித்தார்.


3 வேளையும் உணவுக்காக எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்கான பணத்தை கொடுத்து விடுவதாகவும், ஊரடங்கு முடியும் வரை இந்த சேவை தொடரும் என்று குறிப்பிட்ட அவர், அம்மா உணவகங்களில் வழங்கப்படும் 3 ரூபாய், 5 ரூபாய் உணவுக்கான மதிப்பு இப்போதுதான் தெரிவதாகவும் தெரிவித்தார்.