மூன்று ஆண்டுகளில் ரூ.19 லட்சம் கையாடல்!’ -வேலூர் பி.டி.ஓ அலுவலகத்தை அதிரவைத்த பெண் ஊழியர்

வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்துவந்தவர் சந்திரா (41). இதே அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக தற்காலிகப் பணியில் இருந்தவர் சுதாகர். வேலூர் ஊரீஸ் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக இருந்தவர் குமரவேல்.


இவர்கள் மூன்று பேரும் கூட்டாகச் சேர்ந்து வேலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்குட்பட்ட 94 பள்ளிகளில் பணியாற்றிவந்த சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்களின் சம்பளக் கணக்கில் கையாடல் செய்துள்ளனர்.


சத்துணவு மானியப் பொருள்களிலிருந்தும் சிறு சிறு தொகையை முறைகேடாகத் தங்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி தில்லுமுல்லு செய்துள்ளனர். 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.19 லட்சத்தைக் கையாடல் செய்து பங்கு போட்டுள்ளனர்.


அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ் தணிக்கையின்போது இந்த முறைகேட்டைக் கண்டுபிடித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார். அதையடுத்து, கையாடல் செய்து பதுக்கியவற்றில் உதவியாளர் சந்திராவிடமிருந்து 1,41,000 ரூபாயும், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் சுதாகரிடமிருந்து ரூ.2 லட்சமும் அதிரடியாகப் பறிமுதல் செய்யப்பட்டது.


கலெக்டரின் உத்தரவின் பேரில், முறைகேடு தொடர்பாக 3 பேர் மீதும் வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.


அதையடுத்து, 3 பேரும் தலைமறைவாகினர். போலீஸார் அவர்களைத் தேடி வந்த நிலையில், மூன்றாவது குற்றவாளியான குமரவேல் சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டது தெரியவந்தது.


ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை ரபீர் நகரில் சந்திரா பதுங்கியிருப்பதாகக் குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. நேற்றிரவு அங்கு விரைந்து சென்ற போலீஸார் சந்திராவைக் கைதுசெய்து வேலூர் மத்திய பெண்கள் தனிச்சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்துவரும் சுதாகரைப் பிடிக்கவும் காவல்துறையினர் தீவிரம் காட்டிவருகிறார்கள்.