கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதிலும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதிலும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கோயில்கள், மசூதிகள், தர்காக்கள், தேவாலயங்கள், குருத்வாராக்கள் என அனைத்து வழிபாட்டு தலங்களில் மக்கள் ஒன்றுகூட விதிவிலக்கு அளிக்கப்படவில்லை.


இந்நிலையில் நேற்று முன்தினம், “வெள்ளிக்கிழமை தொழுகைக்காக முஸ்லிம்கள் ஒன்றுகூட வேண்டாம், தனித்தனியாக வீடுகளிலேயே தொழுகை நடத்துங்கள்” என உ.பி. காவல்துறை கேட்டுக்கொண்டது.


இதை பெரும்பாலான முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக்கொண்டு, தங்கள் சமூகத்தினரிடம் வலியுறுத்தினர். எனினும் உ.பி.யின் புலந்த்ஷெஹர், ஹர்தோய் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் முஸ்லிம்கள் ஒன்றுகூடி தொழுகை நடத்தியுள்ளனர்.


இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் புலந்த்ஷெஹர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் கூறும்போது, ‘ஜஹாங்கிராபாத் மற்றும் டிபய் பகுதியில் வழக்கம்போல் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக முஸ்லிம்கள் ஒன்று கூடுவதாக தகவல் கிடைத்தது.


நேரில் செல்வதற்குள் பலரும் தப்பி விட்டனர். இங்கு ஊரடங்கை மீறி தொழுகையை நடத்திய இமாமை கைது செய்ததுடன், 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளோம்” என்றார்.


ஹர்தோய் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக ஊரடங்கை மீறி ஒன்றுகூடித் தொழுகை நடத்தியதாக சுமார் 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக உ.பி. முழுவதிலும் சுமார் 4,000 பேர் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


இதுபோல் உ.பி.யின் மெயின்புரியில் உள்ள பிரபல காளி கோயிலில் பூஜை செய்ய ஒன்றுகூடியதாக 38 பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. இவர்களில் 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.


உ.பி.யில் ஊரடங்கு காலத்தில் உணவுப் பொருட்களை பல மடங்கு விலைக்கு விற்றதாக 23 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.