12,519 பேர் வீட்டில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக 12,519 பேர் வீட்டில் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்கள் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்பது கோரிக்கை இல்லை. அது உத்தரவு.
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் அந்த உத்தரவை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதுவரையில் தமிழகம் முழுவதும் 12,519 பேர் வீட்டில் தனிமையில் இருக்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டும். அதில்
சென்னை, குமரி, தஞ்சை, திருவாரூர், திருச்சி, கோவை, கடலூர், புதுக்கோட்டை, நெல்லை, சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. முகக் கவசங்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இருக்கின்றன.
அவர்களுக்கான என்.95 மாஸ்குகள் உள்ளிட்ட மாஸ்குகள் கையிருப்பாக உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள எல்லா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
10,000 படுக்கைகள் வரை தயார்படுத்த முடியும். மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் குறித்த தகவல்கள் தமிழக அரசால் முறைப்படி அறிவிக்கப்படுகிறது.
எனவே, வதந்திகளை நம்ப வேண்டாம். ஆயுதப் படை காவலருக்கு கொரோனா என்று பரவிய செய்தி வதந்தி. அவருக்கு கொரோனா குறித்த அறிகுறிகள் இருந்ததால் அவர் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன.
அந்த சோதனை குறித்த அறிவிப்பு வெளியாகும். இன்று புதிதாக கொரோனா கண்டறியப்பட்ட மூவரில் இருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.
ஒருவர், வெளிநாட்டுக்குச் செல்லவில்லை. வெளி மாநிலங்களுக்கும் செல்லவில்லை. அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை செய்யப்பட்டுவருகிறது’ என்று தெரிவித்தார்.