ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏ க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ்

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 2017-ம் ஆண்டு பதவி ஏற்றது. அதன் பின்னர் தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார் எடப்பாடி. அப்போது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உட்பட 11 எம்.எல்.ஏ-க்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.


ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எம்.எல்.ஏ-க்கள் பெரும்பான்மை இருந்ததால் ஆட்சி கவிழவில்லை. நம்பிக்கை கோரும் தீர்மானம் வெற்றி பெற்றது. அதன் பின்னர் பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வரானார்.


இந்த நிலையில் ஆட்சிக்கு எதிராக வாக்களித்த எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க சார்ப்பில் வழக்கு தொடரப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், தி.மு.க வின் கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுதாக்கல் செய்யப்பட்டது.


இதன் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 14 -ம் தேதி இந்த வழக்கை முடித்து வைத்தது. `இந்த விஷயத்தில் சபாநாயகர், அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்.


அதேசமயம் சபாநாயகரை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி எந்தக் காலக்கெடுவும் விதிக்க முடியாது' எனத் தீர்ப்பு வழங்கினர் நீதிபதிகள். இதனால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்ட நிலையில் சபாநாயகர் தனபால், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ- க்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.


அரசுக்கு எதிராக வாக்களித்தது தொடர்பாக உரிய விளக்கம் தர வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக வழக்கு விசாரணையின்போது தி.மு.க தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞா் கபில் சிபல், ``முதல்வருக்கு எதிராக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிா்த்து வாக்களித்த 11 எம்.எல்.ஏ-க்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் 2017, மாா்ச் மாதம் முறையிடப்பட்டது.


ஆனால், மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும் அவா்களுக்கு எதிராக இதுவரை அவா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு நோட்டீஸ் கூட அனுப்பவில்லை” என்று தெரிவித்திருந்தார். சபாநாயகர், அவரது அதிகாரத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பார் என நீதிபதிகள் தெரிவித்திருந்த நிலையில், சபாநாயகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.