அளவு சாப்பாடு 10 ரூபாய்தான்! ரஜினி ரசிகர்!

ரிப்பன் மாளிகையில் செயல்பட்ட குறைந்த விலை உணவகம் குறித்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குத் தகவல் சென்றது. III இதையடுத்துதான் அம்மா உணவகம் சென்னையில் உதயமானது.


நடிகர் ரஜினியின் பிறந்தநாளையொட்டி சென்னை மணப்பாக்கம், எம்.ஜி. ரோட்டில் உழைப்பாளி உணவகத்தைத் தொடங்கியுள்ளார், சித்த மருத்துவர் வீரபாபு. வெங்காயம் உள்ளிட்ட சமையல் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் 10 ரூபாய்க்கு சாதம், சாம்பார், காரக்குழம்பு, கூட்டு, ரசம், மோர் ஆகியவற்றை கொடுக்க இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இந்த உணவகத்தை அந்தப்பகுதியில் நடந்துவரும் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த சித்தாள் பெண் ஒருவர்தான் ரிப்பன் வெட்டித் திறந்துவைத்துள்ளார்.


இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 80 பேர் அமர்ந்து சாப்பிடலாம். திறப்பு விழாவில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலர் கலந்துகொண்டனர்.


சித்த மருத்துவர் வீரபாபுவிடம் பேசினோம். சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் கடந்த 15 ஆண்டுகளாக 15 ரூபாய்க்கு அளவு சாப்பாடு வழங்கிவந்தேன். அதில் ஆவாரம்பூ சாம்பார், முடக்கத்தான் ரசம், மூலிகை மோர் ஆகியவற்றைக் கொடுத்தேன். அதோடு மூலிகை உணவு வகைகளையும் குறைந்த விலைக்கு வழங்கினேன்.


உணவகம் தொடங்கி 6 மாதம், கடும் நஷ்டத்தைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன்பிறகு குறைந்தவிலைக்கு சாப்பாடு வழங்கும் வித்தையைக் கற்றுக்கொண்டேன். ஒரு ரூபாய்க்கு வழங்கப்பட்ட டீயின் விலையை மட்டும் 5 ரூபாய் என மாற்றினேன். இதனால் உணவகம் லாபத்தில் இயங்கத் தொடங்கியது. தினமும் 1,000 பேருக்கு குறைந்த விலையில் சாப்பாடு வழங்கிய திருப்தி ஏற்பட்டது.


ரிப்பன் மாளிகையில் செயல்பட்ட குறைந்த விலை உணவகம் குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குத் தகவல் சென்றது. உடனே அப்போதைய தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் விக்ரம்கபூர், மேயர் சைதை துரைசாமி ஆகியோர் குறைந்த விலைக்கு மூலிகை உணவு வழங்குவது குறித்து என்னிடம் ஆலோசனை நடத்தினர். அப்போது தினமும் மூலிகை உணவு கொடுப்பதில் சில சிரமங்கள் ஏற்படும் எனக் கருதினார்கள். இதையடுத்துதான் அம்மா உணவகம் சென்னையில் உதயமானது.


தற்போது ரிப்பன் மாளிகையில் குறைந்த விலை மூலிகை உணவகம் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அந்த உணவகத்தை சென்னை மணப்பாக்கத்தில் நடத்த முடிவு செய்தேன். அங்கு 15 ரூபாய்க்கு வழங்கப்பட்ட சாப்பாடு இங்கு 10 ரூபாய்க்கு மட்டும் வழங்க உள்ளேன். இங்கு 10 ரூபாய்க்கு அளவு சாப்பாடும் 30 ரூபாய்க்கு அளவில்லாத சாப்பாடு வழங்கப்பட இருக்கிறது. தினமும் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை சாப்பாடு கிடைக்கும். 50 ரூபாய்க்கு பார்சல் சாப்பாடு வழங்கப்படும்.


சென்னை மணப்பாக்கம் பகுதியில் ஏராளமான ஐ.டி.நிறுவனங்கள் உள்ளன. மேலும், கட்டடப் பணிகளுக்காக பலர் இங்கு வருகின்றனர். அவர்களுக்காகத்தான் இந்த விலையை நிர்ணயம் செய்துள்ளேன். நான் ரஜினி ரசிகர். இந்த வயதிலும் ரஜினி நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் நடித்த படத்தின் பெயர் உழைப்பாளி. அதனால்தான் உழைப்பாளி உணவகம் என பெயரிட்டுள்ளேன். விரைவில் ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராகச் சேரவுள்ளேன் என்றார்.


இந்த உணவகத்தில் ஆவாரம்பூ அல்லது முருங்கைக் கீரை சாம்பாரும், வேப்பம்பூ அல்லது கொள்ளு அல்லது முடக்கத்தான் ரசமும் பூண்டு அல்லது காராமணி அல்லது கருவேப்பிலை காரக் குழம்பும் கிடைக்கும் என அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர இட்லி, வடை தலா 5 ரூபாய்க்கும் தோசை, புட்டு, இடியாப்பம், வாழை இலை கொழுக்கட்டை தலா 10 ரூபாய்க்கும் விற்கப்படும்.


பொங்கல், பூரி, சாப்பாத்தி தலா 15 ரூபாய்க்கும் கருப்பட்டி கேசரி, கருப்பட்டி பொங்கல், உளுந்தங்களி தலா 20 ரூபாய்க்கும் கிடைக்கும் என உணவுப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


30 ரூபாய் அளவில்லாத சாப்பாட்டில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு இந்த உழைப்பாளி உணவகத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக டாக்டர் வீரபாபு நம்மிடம் தெரிவித்தார். மேலும், அவர் சர்க்கரை நோயாளிகளுக்காக சிறப்பு உணவு வகைகள் இருப்பதாகவும் எலும்பு, நரம்பு வலிமைக்கான உணவுகளும் இந்த உணவகத்தில் கிடைக்கும் என்கிறார் உற்சாகத்துடன்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்