ஏப்ரல் 1ம் தேதி முதல் காகித பயன்பாட்டுக்கு குட்பை காவல்துறை இ-ஆபீசுக்கு மாற்றம்

வேலூர்: தமிழகம் முழுவதும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் காவல்துறை முழுவதும் இ-ஆபிஸ்களாக மாற்றப்பட உள்ளது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழக காவல்துறையில் புகார் அளிப்பது, அரசு பணிகளில் சேருவதற்கான நன்னடத்தை சான்று பெறுவது உட்பட பெரும்பாலானவை ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும், தமிழக டிஜிபி உத்தரவுகள் தொடங்கி சப்-டிவிஷன்களில் டிஎஸ்பிக்கள் உத்தரவு வரையில், அனைத்து தகவல் பரிமாற்றங்களும் இ-மெயில்கள் மூலமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுகுறித்து காவல்துறை உயர்அதிகாரிகள் கூறியதாவது: காவல்துறையில் தற்போது வரையில் கடிதப்போக்குவரத்து பின்பற்றப்படுகிறது.


தபால் மூலமாகவும் சில உத்தரவுகள் அனுப்பி வைக்கப்படுகிறது. அதோடு காவல்நிலையங்களில் தபால் கொண்டு செல்லவும், தபால் டியூட்டி என்று தனியாக காவலர்களுக்கு வழங்கப்படுவது வழக்கத்தில் உள்ளது.


இனி காவல்துறை முழுவதும், காகிதப்பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து ஸ்கேனர், இ-மெயில் என்று காவல்துறை முழுவதும் இ-ஆபீஸ்களாக மாற்றப்பட உள்ளது.


இதன்மூலம் தபால் கொண்டு செல்ல தனியாக காவலர்களுக்கு தபால் டியூட்டி இருக்காது. அனைத்து ஆவணங்கள் பரிமாற்றமும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினர்.