மகளிர் தினத்தை முன்னிட்டு மின்சார ரெயிலை பெண்களை இயக்க வைத்து தெற்கு ரெயில்வே கவுரவித்து உள்ளது

சர்வதேச மகளிர் தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. பெண்களை கவுரவிக்கும் விதமாக மகளிர் தினத்தை முன்னிட்டு தெற்கு ரெயில்வே சிறப்பு ஏற்பாடு செய்திருந்தது. ‘அனைவரும் சமம்’ என்ற கருப்பொருளை முன்வைத்து இந்த ஆண்டு தெற்கு ரெயில்வே மகளிர் தினத்தை கொண்டாடி வருகிறது.


கடந்த 1-ந் தேதியில் இருந்து மார்ச் மாதம் 10-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் முழுவதும் தெற்கு ரெயில்வேக்குட்பட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


மேலும் ரெயில்வேயில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம், கட்டுரை போட்டி, தனித்திறமை போட்டிகள், விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகளை தெற்கு ரெயில்வே நடத்தி வருகிறது.


பெண்களே இயக்கினர்


இந்த நிலையில் சென்னை மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூருக்கு வழக்கமாக இயக்கப்படும் மின்சார ரெயிலை, ஆண்கள் அல்லாமல் முழுவதுமாக பெண்களை கொண்டு இயக்க திட்டமிடப்பட்டது.


அதன்படி நேற்று காலை 9.15 மணிக்கு மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட மின்சார ரெயிலில் என்ஜின் டிரைவர், கார்டு, டிக்கெட் பரிசோதகர்கள், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஊழியர், நிலைய அதிகாரி உள்பட அனைவரும் பெண்களாகவே இருந்தனர். இந்த மின்சார ரெயில், 10 பெண் ஊழியர்கள் கொண்ட குழு தலைமையில் இயக்கப்பட்டது.


மறுமார்க்கமாக 10.50 மணிக்கு திருவள்ளூரில் இருந்து மூர்மார்க்கெட்டுக்கு அதே மின்சார ரெயில் இயக்கப்பட்டது.


பராமரிப்பு பணியிலும் பெண்கள்


இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னை கோட்ட மேலாளர் பி.மகேஷ், “ஆண்களுக்கு நிகராக பெண்களும் சமம் என்ற நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 10 நாட்கள் சென்னை கோட்டத்தில் மகளிர் தினம் கொண்டாடப்படும். மகளிர் தினத்தையொட்டி நாளை சென்னை கோட்டம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.


ரெயில்களை இயக்கிய பெண்களுக்கு அங்கிருந்த பயணிகள் மற்றும் பெண்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர்.


இதேபோல் பேசின் பாலம் ரெயில்வே பணிமனையில் பெண் ஊழியர்களே அனைத்து பணிகளும் செய்து வருகின்றனர். 1,200 ஊழியர்களில் 190 பேர் பெண் ஊழியர்கள் ஆவார்கள். ரெயில்களில் ஆயில் சோதனை, ரெயில் பெட்டிகள் பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் பெண்கள் செய்து வருகின்றனர்.


இதேபோல் சென்னை கோட்டத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் பலர் ரெயில்களை இயக்கி வருகின்றனர்.


Popular posts
நடிகையுடன் நடைபெற்ற மது விருந்து..! பண்ணை வீட்டுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!
Image
மாடு வெட்டக் கூடாது, 50 பேருக்கு மேல் கூட கூடாது - பக்ரீத் கொண்டாட கட்டுப்பாடுகள்
Image
சர்ச்சையை கிளப்பிய அதிகாரி மீது நடவடிக்கை - வடக்கிற்கு உரக்கச் சொன்ன தமிழக அரசு உதவி ஆணையர் விடுவிப்பு - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
Image
காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி அதிரடி உத்தரவு
Image
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் வழங்கிய நோட்டீஸை அடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Image