சங்கத்தின் தலைவர்களுக்காக போராடிய உறுப்பினர்களின் தற்போதய நிலை என்ன....

அந்த கால கட்டத்தில் வியாபாரிகள் அனை வரும் ஒரே குடும்பமாக ' இருந்தனர். ஜாதி மதரீதியாக வேறுபட்டாலும், வியாபார ரீதியாக ஒன்றுபட்டு வாழ்ந்து வந்தனர்.


வியாபாரிகள் என்ற ஓர் குடையின் கீழ் வாழும் இவர்களை அரசு ரீதியாகவோ, அதிகாரிகள் அச்சுறுத்தலோ, காவல்துறை சீண்டினாலோ, ஒன்றுபட்டு எதிர்த்து போராடி வெற்றி கண்டனர்.


மே மாதம் 1ஆம் தேதி, உலகம் கொண்டாடும் உழைப்பாளர்கள் தினம். ஆனால், தமிழ்நாடு கொண்டாடும் வியாபாரிகளின் உழைப்பாளர் தினம் என்பது மே மாதம் 5 ஆம் தேதி தான். அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வியாபாரிகளின் கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும். குடும்பம் குடும்பமாக கூடி மகிழும் திருவிழாவாக திகழ்ந்த தினம் தான், மே 5.


வியாபாரிகளுக்கு ஒவ்வொரு ஊரிலும் சங்கம் இருக்கும் அதற்கு ஒரு தலைவர் தான் இருப்பார். தேர்தல் நடத்தி தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். சந்தா வசூல் கிடைக்கும் பணத்தை வியாபாரிகளுக்கு வழங்கி, வியாபார தொழில்கள் சிறப்பாக நடக்க உறுதுணையாக இருப்பார்கள்.


வியாபாரிகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டால் சங்கமே முன்னின்று தீர்வு காணும். சட்ட ரீதியாக பிரச்சனைகள் வந்தாலும் சங்கம் சார்பில் வழக்கறிஞர் வைத்து வாதாடி வெற்றி பெறுவார்கள்.


குக்கிராமத்தில் கூட வியாபாரிகள் சங்கம் உள்ளது. கிராமம் முதல் மாவட்டம் வரை வியாபாரிகள் சங்கம் இருக்கும். மாவட்ட ரீதியாகவும் தலைவர் இருப்பார்கள். வருடந்தோரும் மே 5 ஆம் தேதி அன்று மாவட்ட அளவில் வியாபாரிகளின் திருவிழாவாகவே நடைபெறும்.


மாநில அளவில் வியாபாரிகளுக்கு தன்னிகரில்லா தலைவராக வெள்ளையன் அவர்கள் இருந்தார். வெள்ளையன் தலைவராக இருந்தபோது, சிறு வியாபாரிகளை நசுக்கும், பெரிய கார்பரேட் நிறுவனங்கள் தமிழகத்தில் காலூன்ற முடியவில்லை .


இதற்கு சென்னையில் மிகப்பெரிய அளவில் பக்கபலமாக இருந்தவர், மாவட்ட தலைவர் விக்ரமராஜா. வியாபாரிகளின் சார்பாக எந்த கோரிக்கையாக இருந்தாலும் அரசு தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.


காலப்போக்கில் ஆளும் கட்சியின் சில திட்டங்களுக்கு வெள்ளையன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இதனால் வியாபாரிகள் சங்கத்தில் பிளவு ஏற்படுத்த, கட்சிகளின் சாணக்கியர்கள் முடிவு செய்தனர். இதன் காரணமாக அதிகமாக பேசப்படும் சென்னை மாவட்டத்தில் தலைவர் விக்ரமராஜா அவர்களை தங்களது வலையில் சிக்க வைத்தனர்.


விக்ரமராஜா அவர்கள் சங்கத்தின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர் என்பது வியாபாரிகள் அனைவரும் அறிந்த ஒன்று. அப்போது, 2010 ஆம் ஆண்டு தேர்தல் நேரத்தில், எந்த கட்சி வியாபாரிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்களோ அவர்களுக்கு தான் ஓட்டு என வெள்ளையன் பகிரங்கமாக அறிவித்தார்.


தனது கட்சிக்கு ஆதரவு இல்லை என்று அறிந்த பிரபல கட்சியில் தலைமை வியாபாரிகளை பிரித்து வேட்டையாட முயன்று விக்ரமராஜா அவர்களை கையில் எடுத்து வெற்றியும் பெற்றார்கள்.


இதன் காரணமாக, தென் சென்னை மாவட்டத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் ஒரு அணியினர் வெள்ளையனுக்கு எதிரானவர்களைத் திரட்டி, மதுரையில் போட்டி கூட்டம் நடத்தி, வெள்ளையனுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர்.


இதையடுத்து விக்கிரமராஜாவை பதவியில் இருந்து நீக்கினார் வெள்ளையன். இதையடுத்து விக்கிரமராஜா அணியினர், திருச்சியில் போட்டிக் கூட்டம் நடத்தினர். அதில், பேரவைத் தலைவர் பதவியில் இருந்து வெள்ளையனை தற்காலிகமாக நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


இதன்மூலம் வணிகர் பேரவை இரண்டாகி வெள்ளையன் தலைமையில் ஒரு அணியும், விக்கிரமராஜா தலைமையில் மற்றொரு அணியும் உருவாகின.


ஜூலை மாதம் 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கலைக்கப்பட்டு விட்டது என்றும் இனி, தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு என்ற பெயரில் செயல்படும் என்றும் அதே சின்னம், கொடி தான், அதில் மாற்றம் இல்லை என விக்கிரமராஜா தலைமையில் ஒரு வணிகர் சங்கம் அறிவித்தது.


தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை வெள்ளையன் தலைமையில் செயல்பட்டு வந்ததில், இந்த பேரவையில் முக்கிய நிர்வாகிகளாக செயல்பட்ட மோகன், விக்கிரமராஜா உள்ளிட்டோர், வெள்ளையனை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர்.


இதை தொடர்ந்து விக்கிரமராஜா தலைமையில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சிறப்பு பொதுக்குழு கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடந்தது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை கலைக்கப்படுவதாகவும், இனிமேல் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு என செயல்படும். இதன் தலைவராக இருந்த வெள்ளையன் நிரந்தரமாக நீக்கப்படுவதாகவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .பேரமைப்பின் தலைவராக விக்கிரமராஜா, பொதுச் செயலராக மோகன், பொருளாளராக அரிகிருஷ்ணன், அமைப்பாளராக சொரூபனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


இதன் பின்னர் ஒரு கட்சி சார்ந்த நபராக வலம் வந்தார் விக்ரமராஜா. மற்றொரு கட்சியின் பிம்பத்தை பிரதிபலித்தது வெள்ளையன் சங்கம். கட்சிகளின் பிடியில் சிக்கியது வணிகர் சங்கம். வணிகர்களோ, இரு தாய் பிள்ளைகளானார்கள். ஆனால், இரு தலைவர்களும் தாயை போல நடந்து கொள்ளவில்லை என்பதே நிதர்சன உண்மை.


இனி நாசம் செய்த பிரச்சனைக்கு வருவோம். வெள்ளையன் சங்கத்தின் நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்படுகிறார்.


இது விக்ரமராஜாவின் செயல் தான் என பகிரங்கமாக குற்றச்சாட்டு கூறினார் வெள்ளையன். இது ஒருபுறம் இருக்க, சுமார் 13 கோடி ரூபாய் வரை நாடார் சங்க பணத்தை விக்ரமராஜா கையாடல் செய்துவிட்டதாக அதே சங்கத்தில் ஏற்கனவே நிர்வாகியாக இருந்தவரும் வெள்ளையனின் சகோதரருமான பத்மநாபன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.


அந்த புகாரின் அடிப்படையில் விக்ரமராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது வெள்ளையனின் திட்டமிட்ட சதி என்று விக்கிரமராஜா கூறினார்.


அதன் பிறகு பண ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ உடன்பாடு ஏற்பட்டு, தகுந்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கவில்லை என்று புகாருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இது போன்று ஒருவர் மீது ஒருவர் அளித்த புகார்களால் சந்தி சிரித்தது. நட்டாற்றில் விட்டது போல தவித்தனர், வணிகர் சங்க உறுப்பினர்கள்.


தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இரு தலைமை உருவானது. ஒற்றுமை குலைந்து போனது. ஒரு குடையின் கீழ், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கமாட்டோம் என மத்திய, மாநில அரசுகளை அதிர செய்தவர்கள் ஆன்லைன் வர்த்தகம் மூலம் வணிகம் சுரண்டப்படுவதாக தெரிவித்தவர்கள், தற்போது வரை இரு அணிகளாக பிரிந்து சங்க ரீதியாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார்கள்.


கிழக்கிந்திய கம்பெனிகளை வணிகத்தில் அனுமதித்ததால், ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்தோம். மீண்டும் வெளிநாட்டு கம்பெனிகள், சில்லறை வணிகத்தில் நாட்டிற்குள் நுழையும் வகையில், உலக வர்த்த க ஒப்பந்தத்தில் பிரதமர் கையெழுத்திட்டுள்ளார்.


இதன் மூலம் மீண்டும் சுதந்திரம் பறிபோகும் நிலை உள்ளது. இதை கண்டித்து அன்னிய நிறுவனங்கள் எதிர்ப்பு வாரம் கடைபிடித்து, சுதந்திர தினத்தன்று மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்துவோம் என்று கொக்கரித்தவர்கள் இன்று அன்னியர் வர்த்தகத்திற்கு அடிமை ஆனார்கள்.


விக்ரமராஜா ஒரு கடையடைப்பு போராட்டம் நடத்தினால், மறுநாள் வெள்ளையன் கடையடைப்பு போராட்டம் நடத்துவார். பின்னர் கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, மீண்டும் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடத்துவது வாடிக்கையாகி வந்தது.


இதில் பாதிக்கப்பட்டவர்கள் பாமர வியாபாரிகள் தான். தலைவர்கள் அல்ல. இதற்கு ஒருபடி மேலாக கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் கடையடைப்பு போராட்டம் நடத்துவார்கள்.


தமிழகம் முழுவதுமுள்ள பெரும்பாலான வணிகர்கள் வெள்ளையன் மற்றும் விக்கிரமராஜா தலைமையிலான இருவேறு சங்கங்களில் உறுப்பினராக இருந்து வருகிறார்கள். இதுகுறித்து வணிகர் ஒருவர், அப்போதே ஆதங்கமாக கூறியதாவது “கடந்த 3ஆம் தேதியன்று கடையடைப்புப் போராட்டம் நடத்துவதென வேறொரு அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.


அன்று, அந்த அமைப்பைச் சேர்ந்த வணிகர்களின் கடைகள் திறந்திருந்தன. இதனைத் தொடர்ந்து, தற்போது நாளை நடைபெறவுள்ள கடையடைப்புப் போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளால் பொதுமக்களுக்குத்தான் குழப்பம்” என்று தெரிவித்தார்.


அதிமுக உண்ணாவிரதம் இருந்த நாளன்று ஒரு தலைவரும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தும் நாளில் மற்றொரு தலைவரும், தங்களது வணிகர் சங்க அமைப்புகள் கடையடைப்பில் ஈடுபடுவதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக, கட்சிகளின் கைப்பாவையாக வணிகர் சங்கங்கள் செயல்படுகின்றனவா என்ற கேள்வி எழுந்தது.


விவாசாயிகள் நல்லா இருந்தால்தான் நாங்கள் வியாபாரம் நல்ல முறையில் செய்ய முடியும். விளைச்சல் அதிகமானால் பணபுழக்கம் அதிகமாகும், எனவே விசாயிகள் பிரச்சனைக்கு வியாபார பெருமக்களின் முழு ஆதரவு உண்டு. ஆனால் அன்று நடந்தது என்ன? “அரசியல்.... அரசியல்.... அரசியல்”


விக்ரமராஜா அவர்களுக்கும், வெள்ளையன் அவர்களுக்கும் தற்போதைய வியாபாரிகளின் நிலை நன்றாக தெரியும். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி காரணமாக வியாபாரம் குறைந்துள்ளது. ஒவ்வொரு வியாபாரியும் கடை வாடகை கட்டவும், பணியாளர் சம்பளத்திற்கும், இதர கடை செலவுகளுக்கும், சிரமபட்டுக் கொண்டிருக்கிறான். இந்த நிலையில் ஆ...ஊ...ன்னா கடையடைப்பு நடத்த அழைப்பு விடுத்து விடுகிறீர்கள், அதுவும் வெவ்வேறு தேதிகளில். காரணம் என்னுடையது பெரிய சங்கமா? உன்னுடையது பெரிய சங்கமா? என்ற ஈகோவால் இந்த தனித்தனி அறிவிப்புகள். நல்லா இருக்கு நீங்க வியாபாரிகளை காக்கும் லட்சணம்.


காவிரி பிரச்சனை முதல் அமெரிக்க கோக் மற்றும் பெப்சி போன்ற உயிர்கொல்லி பானங்களை தடை செய்ய வேண்டும் என போராட்டத்தின் கோரிக்கைகள் விரிவடைந்தது. தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களும் கோக், பெப்சியை தடை செய்ய வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கைகளை எதிரொலித்தனர்.


அதன் விளைவாக தமிழகத்தின் மிக முக்கிய வணிகர் அமைப்புகள் இனி கோக், பெப்சியை விற்கப்போவதில்லை என அறிவித்தது. வெள்ளையன் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையும், விக்கிரமராஜா தலைமையிலான தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பும் கோக், பெப்சியை விற்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தது.


கோக், பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனக்களுக்கும், அவற்றை இங்கே கொண்டு வந்து நிறுவிய மத்திய - மாநில அரசுகளுக்கும் இது பெருத்த அவமானமாக கருதப்பட்டது. வெளிநாட்டு குளிர்பானங்கள் 75 சதவீத கடைகளில் அப்போது விற்பனை செய்வதே இல்லை.


எஞ்சிய ஒரு சில கடைகளில் வைத்திருந்த குளிர்பானங்களை அழிக்கும் போராட்டத்தை தொடங்கினார்கள். பல பகுதியில் உள்ள கடைகளில் இருந்த வெளிநாட்டு குளிர்பானங்களை வெள்ளையன் தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரவை நிர்வாகிகள் கீழே ஊற்றி, அழித்தார்கள். இதில் ஒரு நாள் சிறைவாசம் அனுபவித்தனர்.


தமிழகத்தில் அப்போது ரூ.8 கோடி மதிப்பிலான விற்பனை செய்யப்படாத குளிர் பானங்கள் இருந்தது. அதனை திரும்பப்பெற சம்பந்தப்பட்ட குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனங்கள் மறுத்து வந்தது. அதனை திரும்பப்பெறும் வரை தொடர்ந்து வணிகர் சங்க பேரமைப்பு பேச்சுவார்த்தை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது.


பெரிய மால்கள், பார்களில் வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனை மக்கள் வாங்கி குடிக்காமல் இருந்தாலே போதும் என்று கூறினார்கள்.


தற்போது இந் நிலை தொடர்கிறதா? அந்த அறிவிப்புகள் இன்று என்ன ஆனது? சங்கத்தின் தலைவர்களுக்காக போராடிய உறுப்பினர்களின் தற்போதய நிலை என்ன? இதனை தொடர்ந்து, ரிலையன்ஸ், பிலிப்கார்டு, அமசோன் எதிர்ப்பு போராட்டங்கள் கைவிடப்பட்ட காரணம் என்ன? பல கோடிகள் கைமாறின என்று கூறப்படுவது உண்மை தானா? இதன் முழு விவரம் குறித்த தகவல்கள் அனைத்தும், ஆதாரங்களுடன் நமது இதழில் விரைவில் வெளியாகும்..


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)