காவல்துறையினர் அமைச்சரின் தனியார் செக்யூரிட்டி அதிகாரிகள் போல செயல்படுகிறார்கள்...!

தமிழகம் முழுவதும் கடந்த வாரம் -கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் அரசூர் ஊராட்சியிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.


அப்பகுதியைச் சேர்ந்த பிரதான கட்சியினர், ஏராளமான பொது மக்கள், கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதில், தி.மு.க முன்னாள் கவுன்சிலர் முத்துலிங்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.


மேலும், இந்த விவகாரத்தில் அவர் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, வேலுமணி தொடர்பாக அவதூறு பேசியதாக, அரசூர் அ.தி.மு.க நகரச் செயலாளர் சிவசாமி, சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


இதையடுத்து, முத்துலிங்கத்தின் மீது தகாத வார்த்தையில் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்த சூலூர் போலீஸார், அவரை கைதும் செய்துள்ளனர். இது, தி.மு.க வில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர், “அமைச்சர் வேலுமணி பற்றி பேசியதற்காகத் தி.மு.க வின் முத்துலிங்கத்தைக் கைது செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. கிராமசபை என்பது மக்களின் கருத்துகளை, எண்ணங்களைப் பிரதிபலிக்கும் கருத்து கேட்புக் கூட்டம்.


முன்னாள் கவுன்சிலர் என்ற அடிப்படையில் அவர் சொன்ன கருத்துகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து, அந்தப் பிரச்னையில் தீர்வு காண்பதுதான் உள்ளாட்சித்துறை அமைச்சரின் பணி.


ஆனால், இங்கு வேலுமணியின் தலையில் அதிகாரம் என்ற ஆணவம் ஏறி கூடு கட்டியுள்ளது. இதனால், அவரை எதிர்த்துப் போராடினாலோ குறை சொன்னாலோ, கைது என்ற அடக்குமுறையை ஏவிவிடுவது மிகவும் வெட்கக்கேடானது. சமீப காலமாக,


உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு எதிராக ஏதேனும் உண்மைச் செய்தியை வெளியிட்டால், பத்திரிகையாளர்களைக் கைதுசெய்வது, வழக்குப் போட்டால் அவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைப்பது, எதிர்த்துப் பேசும் தி.மு.கவினரை சிறைபிடிப்பது என்று அட்டூழியத்திலும், அராஜகத்திலும் காவல்துறை அதிகாரிகள் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


குறிப்பாக, கோவையில் உள்ள காவல்துறையினர், உள்ளாட்சித் துறை அமைச்சரின் தனியார் செக்யூரிட்டி அதிகாரிகள் போல செயல்படுகிறார்கள் என்பது தமிழகக் காவல்துறைக்கே தலைகுனிவாக அமைந்திருக்கிறது. காவல்துறையின் அறிவிக்கப்படாத துறை அமைச்சராகத் தன் கட்டளையைக் கேட்டு நடப்பவர்களைத் தேர்ந்தெடுத்து, மாவட்டத்துக்கு மாறுதல் அனுமதி கொடுப்பவராக வேலுமணி செயல்படுகிறாரா என்ற சந்தேகம் நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கும், கோவை மக்களுக்கும் எழுந்துள்ளது.


அமைச்சர் பதவிக்கு எஞ்சியிருப்பது இன்னும் 18 மாதங்கள் தான். அதன்பிறகு, அமைச்சர் வேலுமணிக்காக இப்போது பொய் வழக்குப் போடும் காவல்துறை அதிகாரிகளும், அவருடைய தூண்டுதலின் பேரில் வரும் புகார்கள் மீது எல்லாம் தி.மு.கவினரைக் கைதுசெய்யும் அதிகாரிகள், சட்டப்படியான நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது.


சட்டத்தின் ஆட்சியை, அமைச்சரின் ஆணைக்கேற்ற சர்வாதிகார ஆட்சியாக மாற்றும் அநியாயத்துக்கு காவல்துறை துணை போகக்கூடாது.


அப்படித் துணைபோய், ஒழுக்கக் கேடு தாராளமாக உள்ளே நுழைந்துவிடாமல், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவர் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். உள்ளாட்சித் துறை அமைச்சரை எதிர்த்துப் போராடுவதற்காகவோ, விமர்சிப்பதற்காகவோ இனியும் தி.மு.கவினர் கைது செய்யப்பட்டால், நானே கோவைக்கு வந்து மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று எச்சரிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)