இன்றும் ஒருசில வீரர்கள் கிராமங்களிலிருந்து வந்து, இந்திய நாட்டுக்காக பல பதக்கங்களை வென்று பெருமை சேர்த்து வருகின்றனர்.

எதிர்காலத்தில் வீரர்கள் கிராமங்களில் இருந்தே உருவாக இருக்கின்றனர்' என்கிறார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். ஆம், அவர் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. அதற்கேற்றவாறு இன்றும் ஒருசில வீரர்கள் கிராமங்களிலிருந்து வந்து, இந்திய நாட்டுக்காக பல பதக்கங்களை வென்று பெருமை சேர்த்து வருகின்றனர்.


ஆனால், வருத்தமான விஷயம் என்னவென்றால், இன்றும் கிராமங்களில் உள்ள அசாத்திய திறமைசாலிகள், பலமான வீரர்கள் வெளியே வர வாய்ப்பில்லாமல், வளர முடியாமல் தவிக்கின்றனர். 'கஞ்சிக்கே வழியில்லாத உனக்கு எதுக்கு விளையாட்டு? எனக் கேலியும் கிண்டலும் அந்த இளம் வீரர்களின் ஆசையில் மண்ணள்ளிப் போட்டுவிடுகிறது. அதையும் மீறி வளர்ந்துவரும் ஒருசில இளைஞர்களையும், தன்னுடைய அரசியல் பலத்தாலும், பொருளாதார பலத்தாலும் மேல்மட்ட மக்கள் அப்படியே அடக்கிவைத்து விடுகின்றனர்.


'இவர்களுக்கு தமிழகத்திலும், இந்தியாவிலும் முகவரி கிடையாது. அவர்கள், குடத்துக்குள் இருக்கும் விளக்காகவே இருக்கிறார்கள்' என நீதியரசர் என்.கிருபாகரன் கேப்பிடல் மெயில் நூல் வெளியீட்டின் போது அழுத்தமாகப் பேசியிருந்தார்.


உண்மையில் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று பார்த்தோமானால், எத்தனையோ குழந்தைகள் தனித்திறமையுடனும், பன்முகத் தகுதியுடனும் ஜொலிப்பதை நாம் பார்க்க முடியும். ஆனால், அவர்களுக்கு முறையான பயிற்சி கிடைப்பதில்லை. அதுபற்றிய விழிப்புணர்வும்


அவர்களுக்கு இருப்பதில்லை. இப்படிப்பட்ட வீரர்களை வெளியுலகிற்கு கொண்டுவர இந்த அரசாங்கமே முயற்சி எடுக்க வேண்டும். ஆம், விளையாட்டில் சிறந்த மாணவர்களை பள்ளியளவிலேயே கண்டுபிடித்து, அவர்களுடைய குடும்பச் சூழ்நிலை, பொருளாதாரப் பிரச்சினைகளைக் கவனத்தில்கொண்டு, அவர்கள் விளையாட்டுத்துறையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.


கிராமப் பஞ்சாயத்து மூலம் அக்கிராமங்களுக்குத் தேவையான விளையாட்டு மைதானம், உபகரணங்கள், பயிற்சி மையங்கள் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். இதற்காக அரசு, கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்வதுடன் நல்ல அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும். ஒரு நல்ல பயிற்சியாளரால்தான், இளம் வீரனை அடையாளம் கண்டு கொண்டு, அவனை ஜொலிக்கச்செய்ய முடியும். நம் கிராமத்து வீரர்களை அடையாளம் காணும் அதே நேரத்தில், அரசு இன்னும் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


அதாவது அரசியல், பொருளாதாரம், சிபாரிசு ஆகியவற்றுடன் சிலர் முன்னேறிச் செல்வதை தடுத்தே ஆகவேண்டும். அப்போதுதான், உண்மையான திறமை கொண்ட கிராமத்து இளைஞர்கள் வெற்றிக்கொடி ஏற்ற முடியும். அப்படியொரு நாள் வரும்போது, ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில், நம் இந்தியா முதல் இடம்பிடித்தே தீரும்.