பாஜகவா.. அதுவே ஒரு தேங்காய் மூடி கட்சி.. இப்படி பட்டுன்னு பேசி.. பொட்டுன்னு உடைச்சிட்டாரே ராதாரவி!

சென்னை: "ராதாரவி பணம் வாங்கிட்டான்னு சொல்றாங்க... போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா? இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா? அது ஒரு தேங்காய் மூடி கட்சி... அவர்களுடைய எண்ணம் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்பதுதான்.. அரசியல்வாதிகளில் சிரமப்படுபவர்களும் இருக்காங்க.. பணக்காரர்களாக மாறி மல்டி மில்லியனர்ஸாவும் இருக்கிறார்கள்... யாரா இருந்தாலும் சரி.. அலெக்ஸாண்டர் வெறும் கையை தொங்கப்போட்டு போனதுபோலதான் போகணும்" என்று ராதாரவியின் சர்ச்சை பேச்சு விவகாரமாக வெடித்துள்ளது.


நடிகர் ராதாரவி போகாத கட்சியே இல்லை.. கிட்டத்தட்ட எல்லா கட்சியிலும் ஒரு ரவுண்டு அடித்து வந்துவிட்டார்.. இப்போது சமீபத்தில் ஐக்கியமாகி உள்ளது பாஜகவில்! இவர் பாஜகவுக்கு போன நேரம் ஏகப்பட்ட சர்ச்சைகள், பிரச்சனைகள், விவாதங்கள் என நடந்து வருகிறது.. நண்பர் விஜய், நண்பர் விஜய் என்று அடிக்கடி சொல்லும் ராதாரவி, ரெய்டு விவகாரத்துக்கு கூட வாய் திறக்கவில்லை..


பட்டும் படாமலும்தான் பதில் தந்திருந்தார். ஆனால் இப்போது பேசக்கூடாததை பேசி, சொந்த கட்சியிலேயே விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறார்..சென்னையில் கல்தா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.. இவ்விழாவில் நடிகர் ராதாரவி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், என்னை பொறுத்தவரைக்கும், காலை தொட்டு கும்பிடுவதே தப்பு.. 5 படங்கள் தயாரித்திருக்கிறேன்.


ஆனால் இப்போது படம் தயாரிக்க பயமாக இருக்கு.. தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். படம் பார்க்க வருபவர்கள் யாரும் செல்போனை கொண்டு வரக்கூடாதுன்னு ஒரு சட்டம் போட்டால் நல்லா இருக்கும்.. அப்படி செய்தால் ஒரு படம் 3 காட்சிகள் வரை நன்றாக போகும். இந்தப் படத்தில் ஒரு சீனில், "அரசியல்வாதிகளா எல்லாரையுமாடா சாவடிப்பீங்க" என்று ஒரு டயலாக் இருக்கு.. மக்கள் தான் எல்லாரையும் சாவடிக்கிறாங்களே தவிர அரசியல்வாதிகள் கிடையாது..


மக்களுக்கு எந்த இடத்தில் தட்டி கேட்க வேண்டும், எதை கேட்க கூடாதுன்னு தெரியல... பக்கத்து மாநிலத்திலிருந்து தமிழகத்தில் வந்து குப்பைகளை கொட்டுவதை வைத்து படம் இயக்கியிருக்கும் இந்த படத்தின் டைரக்டரை நான் பாராட்டுகிறேன். தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் எதுக்காக ஓட்டு போட 2, 3 ஆயிரம் தர்றாங்க? என் இலவசங்கள் தர்றாங்க.. உனக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லையே, ஏன் ஓட்டுக்கு காசு தர வேண்டும் என்று மக்கள் யோசிக்க வேண்டும். அப்படி நீங்கள் எல்லாம் யோசித்தீர்கள் என்றால் படத்தில் வருவதுபோன்று குப்பைகளை கொட்டாமல் பார்த்துக்கொள்ளலாம். எதற்கெல்லாமோ போராடி 3, 4 கோடி கையெழுத்து வாங்குகிறோம்...


ஆனால், குப்பை கொட்டக் கூடாது என்று கையெழுத்து வாங்க வேண்டியதுதானே? குப்பை கொட்டுவதை சொல்வதால் அதிமுக அரசை திட்டுகிறார் என்று நினைக்க வேண்டாம்.. கடந்த 50 வருஷமாகவே குப்பை கொட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அரசியல்வாதிகளை நாம் தான் வளர்க்கிறோம்... யார் இந்த தெருவை சுத்தமாக வைத்திருக்கிறார்களோ அவங்களுக்குதான் தான் ஓட்டு என்று சொல்லி பாருங்கள். எல்லா தெருக்களும் சுத்தமா இருக்கும்.


சும்மா அரசியல்வாதி, அரசியல்வாதின்னு காரணம் சொல்கின்றனர். பாவம், அரசியல்வாதிகள்.. அரசியல்வாதிகள் படுகின்ற கஷ்டம் நமக்குதானே தெரியும்.. ராதாரவி கட்சி மாறிவிட்டார்.. பணம் வாங்கிவிட்டார்ன்னு சொல்றாங்க... போயும் போயும் பாஜக பணம் தருதுன்னு சொல்லலாமா? இந்த மேடையில் வெச்சே சொல்றேன், பாஜக பணம் தரும் கட்சியா? அது ஒரு தேங்காய் மூடி கட்சி. அவர்களுடைய எண்ணம் இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என்பதுதான்...


அதனால் எல்லா அரசியல்வாதிகளும் பணம் வாங்கிக்கொண்டு சந்தோஷமாக இல்லை, சிரமப்படுபவர்களும் இருக்காங்க... பணக்காரர்களாக மாறி மல்டி மில்லியனர்ஸா இருக்கிறார்கள். .. ஆனா, யாரா இருந்தாலும் சரி.. அலெக்ஸாண்டர் வெறும் கையை தொங்கப்போட்டு போனதுபோலதான் போகணும்" என்றார். ராதாரவியின் இந்த பேச்சில் 3 விஷயம் கவனிக்கத்தக்கது..


"எதுக்கெல்லாமோ கையெழுத்து வாங்கிறோம்" என்று சொல்லி திமுகவின் கையெழுத்து இயக்கத்தை சாடி உள்ளார்... "50 வருஷமாகவே குப்பை கொட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று அதிமுகவை வாரி இருக்கிறார்.. அடுத்து "தேங்காய் மூடி கட்சி" என்று சொந்த கட்சி குறித்து தாக்கி பேசி உள்ளார்..


இதற்கெல்லாம் மேற்கண்ட 3 கட்சிக்காரர்களும் என்ன பதிலடி தரப்போகிறார்கள் என தெரியவில்லை.. 3 கட்சியுமே ராதாரவி கால் பதித்தகட்சிதான்.. அதனால் மக்களின் எதிர்பார்ப்பு எகிறி போய் உள்ளது!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு