கணையத்தை காப்பாற்றி கொள்ளுங்கள்

சென்ற வாரத்தில் ஒரு நாள், எங்கள் அலுவலகத்தில் நண்பர்கள் சிலர் மிக்க வருத்தத்தில் இருந்தார்கள். ஏன் என்று சென்று விசாரித்த பொழுது, அவர்களுடன் முன்பு வேலை செய்த பழைய நண்பர் ஒருவரின் பதினான்கு வயது நிரம்பிய ஒரே மகன், கணையத்திலும், பித்த நீர்ச் சுரப்பியிலும் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறந்துவிட்டதாகத் தெரியவந்தது.


அச்சிறுவன் மிகவும் பருமனாக இருப்பான் எனவும் அவன் உடலில் இருந்த கொழுப்பின் அளவானது, இயல்பாக இருக்க வேண்டிய அளவை விட நான்கு மடங்கு அதிகம் இருந்ததாகவும், அதனால், உடற்கோளாறு கண்டுபிடிக்கப்பட்டும் மருத்துவர்களால் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்ய இயலவில்லை என்றும் பேசிக்கொண்டிருந்தார்கள்.


எனக்கு வருத்தத்தையும் கோபத்தையும் ஒருசேர உண்டாக்கியது இத்தகவல். அந்தப் பையன் இறப்பிற்கு யார் காரணம்? அளவில்லாமல் உண்ட அவனா? அவனுக்கு எடுத்துக்கூறாத பெற்றோரா? நம் குழந்தைகள் கொழுகொழுவென்று இருந்தால்தான் ஆரோக்கியம் என்று நாம் நினைக்கிறோம். எனவே தேவைக்கு அதிகமான, அதிக சக்தி தரக்கூடிய உணவுகளை, கொழுப்புச் சத்து நிறைந்த உணவைத் திணித்து அவர்கள் உடல்நலம் கெட நாமே வழிவகுத்துவிடுகிறோம்.


பசியைத் தணிக்கவும், உடல் வளர்ச்சியடைவதற்கும் தேவையான அளவு உணவை மட்டுமே உண்ணுதல் வேண்டும். கால்நடைகள் இதைக்கண்டிப்பாகப் பின்பற்றுகின்றன. விவரம் புரியாத குழந்தைகளும் பின்பற்றுகின்றன.


சின்னஞ்சிறு கைக்குழந்தைகளைப் பாருங்கள். அளவுக்கு அதிகமாக ஒரு வாய்ப் பால் கூட அருந்தமாட்டார்கள். அப்படியே அருந்தினாலும் உடனே அதைக் கக்கி (வாந்தி எடுத்து) விடுவார்கள். விவரம் அறிந்த நாமோ, ருசிக்கு அடிமையாகி அதிக அளவு உணவை உட்கொண்டு அவதிப் படுகிறோம். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது ஒரு பழமொழி. அமுதமே அளவு கடக்கையில் நஞ்சாகுமானால், மற்ற உணவுகளைப் பற்றிக்கூறவும் வேண்டுமா?


அளவான உணவை, சரியான கால இடைவெளிகளில் உண்டு வந்தாலே பல விதமான நோய்களைத் தவிர்க்கலாம். உப்பு, புளிப்பு, உறைப்பு, இனிப்பு என்ற எல்லாமே அளவுடன் இருக்கவேண்டும். உணவில் அறுசுவைகளும் இடம் பெறுதல் நல்லது எனினும் நாம் உண்மையிலேயே உடலுக்கு நன்மை செய்யக்கூடிய துவர்ப்பையும் கசப்பையும் விட்டுவிட்டு மற்ற சுவைகளை அதிகம் சேர்த்துக் கொள்கிறோம்.


என் தோழி ஒருத்தி, தயிர் சாதத்திற்கு ஊறுகாய் தொட்டுக்கொண்டுதான் எல்லாரும் பார்த்திருப்பார்கள். இவளோ ஊறுகாய்க்குத் தயிர்சாதம் தொட்டுக்கொள்ளும் விநோதப் பிறவி. இன்னொருவரோ, இனிப்பைப் பார்த்தால் விடமாட்டார். இப்படி ஒரு வகையை மட்டும் அதிகமாகச் சேர்த்தால், உடல் உறுப்புகள் என்ன ஆகும்?


இந்த உடலைக் கொண்டுதான், நாம் எல்லாவற்றையும் செய்கிறோம். நம் உடல் நமக்கு ஒரு விசுவாசம் நிறைந்த வேலைக்காரனாகச் செயல்படுகிறது. அந்த உடலைப் பேண வேண்டியது நம் கடமை. ஆனால் அளவுக்கு அதிக வேலை எப்படி நம்மைப் பலவீனமாக்குகிறதோ, அதே போல் அளவுக்கு அதிக ஓய்வும், உணவும் தீமையினை விளைவிக்கக் கூடியன.


இந்தப் பொருள் குறித்தும் திருவள்ளூவர் நமக்கு எவ்வளவு அழகாகத் தெளிவாக அறிவுரை கூறியுள்ளார் என்று மருந்து என்னும் அதிகாரத்தைப் படித்தால் புரியும். நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் தொடாத சங்கதியே இல்லையென்றுதான் நமக்குத் தெரியுமே. உணவு உண்ணும் கலை பற்றி, உடல் நலம் பற்றி அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? மருந்து என்ற இந்த தொண்ணூற்றைந்தாம் அதிகாரத்தில் பத்தில் ஆறு குறள்கள் அளவுடன் உண்பதைப் பற்றித்தான் அழுத்தமாகப்பேசுகின்றன.


'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.' இது 942ம் குறள். இதன் பொருள் நாம் உண்ட உணவு செரித்துவிட்டதா இல்லையா என்று அறிந்துகொண்டு, உணவு செரித்தபின்பு உண்ணுவோமானால், நம் உடலுக்கு மருந்து என்று ஒன்று தேவையில்லை என்பதாகும். அதாவது, அளவாக உண்கையில் நோயே நம்மை அண்டாது. நோயில்லையெனில் மருந்து எதற்கு? அதற்குப் பிறகு என்ன சொல்கிறார்?


முன் உண்ட உணவு செரித்து விட்டதா என்று அறிந்துகொண்டும், மீண்டும் உண்கையில், அளவாகவும் உண்ண வேண்டும். இதுவே, உடம்பைப் பெற்ற ஒருவன், அதை நீண்டநாள் காக்கும் வழி. அதாவது, நோய்நொடி யின்றி அதிக காலம் உயிர்வாழ, உணவுக்கட்டுப்பாடு அவசியம் என்பதை 'அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.' (மருந்து குறள் எண்943)


என்று தெளிவாக்குகிறார். அத்துடன் அவர் விட்டுவிடவில்லை. எந்த நூலில் பார்த்தாலும் சில கருத்துக்கள், மனதில் பதிவதற்காக மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதுண்டு. குழந்தைகளுக்கு ஒரு அவசியமான கருத்தைச் சொல்ல முயலுகையிலோ, முக்கியமான வேலைகளைச் செய்ய பிறரைப்பணிக்கும்பொழுதோ நாம் திரும்பத்திரும்பச் சொல்கிறோமல்லவா? அதேபோல், கட்டுப்பாடாக உணவருந்துவதன் இன்றியமையாமையை விளக்க வந்த வள்ளுவரும், வெவ்வேறு முறையில் அக்கருத்தை வலியுறுத்துகிறார். அடுத்து 'மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு' (மருந்து குறள் எண் 945)


என்ற குறளின் மூலம், தமக்கு ஒத்துவராத உணவு வகைகளை ஒருவர் விலக்கி வாழ்வாராயின் அவருக்கு, அவர் உயிருக்கு ஊறு ஏதும் இல்லை. அதாவது நோயினால் துன்பம் நேரிடாது என்கிறார். நாம் பலசமயம் என்ன செய்கிறோம்? நாவின் சுவைக்கு அடிமைப்பட்டு, நமக்கு ஒவ்வாத ஏதேனும் உணவை அருந்துகிறோம். சளித்தொல்லையால் அவதிப்படுபவர், தன் ஆவலை அடக்க இயலாமல் பனிக்கூழ் (Ice Cream) சாப்பிடுவதும், குடல் அழற்சி (Ulcer) நோயினை உடையவர் காரசாரமான மசாலா உணவைச் சாப்பிடத் துடிப்பதையும் நாம் பலமுறை கண்டிருக்கிறோம்.


பல முறை நாமே இத்தகைய உணர்விற்கு உணவிற்கு??) உள்ளாகியிருக்கிறோம்தானே? அதற்கு முந்தைய குறளும் இதேதான் சொல்கிறது. 'அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து.' (மருந்து குறள் எண் 944) சென்ற முறை உண்ட உணவானது உடலுக்கு ஒத்துக்கொண்டதையும் செரிமானமாகிவிட்டதையும் அறிந்துகொண்டு, நன்கு பசிக்கும்பொழுது மட்டுமே அடுத்தவேளை உணவை உட்கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.


அதாவது தன் வயிற்றுக்குத் தேவைப்படும் அளவை அறிந்து, குறைந்த அளவு உணவுட்கொள்ளும் மனிதனிடம் இன்பம் தங்குவது போல், கட்டுப்பாடின்றி கன்னாபின்னாவென்று உண்பவனிடம் நோய் தங்கும் என்பது இதன் பொருள். 'தீயள வின்றித் தெரியான் பெரிதுண்ணின் நோயள வின்றிப் படும்.' (மருந்து குறள் எண் 947) இதன் பொருள் தன் வயிற்றுப்பசியாகிய தீயின் அளவு என்ன, அதைத் தணிக்கத் தேவைப்படும் உணவின் அளவு என்ன என்பதை ஆராயாது, அதிகமான உணவு உட்கொண்டால், நோயும் அளவில்லாமல் வந்து சேரும் என்பதாகும்.


கடவுள் நம்மைப் படைக்கும்பொழுது, ஒரு செயலைச் செய்வதற்கான கருவிகள் பலவற்றையும் இரண்டிரண்டாகக் கொடுத்திருக்கிறார்.


கேட்கும் பணி ஒன்று, செவியோ இரண்டு. பார்க்கும் தொழில் ஒன்று, கண்களோ இரண்டு. நுரையீரல் இரண்டு, சிறுநீரகம், கால்கள், கைகள் எல்லாமே இரண்டிரண்டு. ஆனால் பேசுதல், உண்டல் ஆகிய இரண்டு வேலைகளைச் செய்யும் வாயோ ஒன்றே ஒன்றுதான். ஏன். பேசுவதிலும் சரி, உணவுண்பதிலும் சரி. நாம் அளவோடிருக்கவேண்டும் என்பது தான் ஆண்டவனின் நோக்கம் போலும்.


அளவொடு உண்போம், வளமொடு வாழ்வோம். 


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)