நீதிபதி முரளிதருக்கு டிரான்ஸ்பர்.. அதிரடிகளின் நாயகன்.. யார் இவர்..

சென்னை தந்த பயிற்சி.. ஒரே இரவில் நீதிபதி முரளிதருக்கு டிரான்ஸ்பர்.. அதிரடிகளின் நாயகன்.


டெல்லி: நேற்று டெல்லி கலவரம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான முரளிதர் பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னையில் பயிற்சி மேற்கொண்டு வழக்கறிஞர் ஆன இவருக்கு பின் நிறைய அதிரடி கதைகள் இருக்கிறது.


அது 1990கள் தொடக்கம், இந்தியா முழுக்க மெட்ராஸ் ஹைகோர்ட்டை உற்றுநோக்கிய காலம்.


காரணம் மெட்ராஸ் ஹைகோர்ட்டில் பணியாற்றிய வழக்கறிஞர்கள். ஆம் இந்தியாவின் மிக சிறந்த வழக்கறிஞர்கள் மெட்ராஸ் ஹைகோர்ட்டில்தான் அப்போது இருந்தார்கள்.


இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மெட்ராஸ் ஹைகோர்ட் வழக்கறிஞர்கள் வாதிடுவதை பார்க்க மற்ற மாநில வழக்கறிஞர்கள் வருவது வழக்கம். பல மாநில வழக்கறிஞர்கள், சென்னை வழக்கறிஞர்களிடம் பயிற்சிக்கு சேர்ந்ததும் அப்போதுதான் தொடங்கியது.


சென்னை எப்படி
சென்னையில் இருக்கும் சட்டக்கல்லூரிகள் தரமான பல வழக்கறிஞர்களை உருவாக்கியது.


தேசிய தலைவர்களின் வழக்குகள் பலவற்றில் சென்னை வழக்கறிஞர்கள் அப்போது ஆஜர் ஆவது மிக இயல்பான காரியமாக இருந்தது.


அப்படி சென்னையில் இருந்து இந்தியா முழுமைக்கும் பிரபலமாக இருந்த வழக்கறிஞர்களில் ஒருவர்தான் முரளிதர். 1984ல் பயிற்சியாளராக தனது வழக்கறிஞர் பணியை தொடங்கியவர் தன்னுடைய வாதத்தால் சில வருடங்களில் நாடு முழுக்க இருக்கும் வழக்கறிஞர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.


எப்படி பிரபலம்
முரளிதர் சென்னையை சேர்ந்த தமிழர் என்பது கூடுதல் சிறப்பு. இவர் வழக்கறிஞராக இருந்த போதில் இருந்தே மிகவும் கண்டிப்புடன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


முதலில் சென்னை ஹைகோர்ட், பிறகு டெல்லி ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக இருந்தார். அதன்பின் ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கறிஞராக இருந்தார்.


பின் மீண்டும் டெல்லியில் வழக்கறிஞராக இருந்தார். தற்போது டெல்லி ஹைகோர்ட் நீதிபதியாக உள்ளார். மிகவும் நேர்மையான நீதிபதிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மதம் எப்படி
இவர் நாடு முழுக்க நடந்த மதக்கலவரங்களை தன்னுடைய வழக்குகளில் சுட்டிக்காட்டி இருக்கிறார்.


அதன்படி பிரபல சஜ்ஜன் குமார் வழக்கில் இவர் குஜராத் கலவரம் குறித்து பேசினார். 2002ல் குஜராத்தில் நடந்த கலவரம் , 1993ல் மும்பையில் நடந்த கலவரம், 2008 ஒடிசாவில் நடந்த கலவரம், 2013ல் முசாபர் நகரில் நடந்த கலவரம் எல்லாம் ஒரே மாதிரியான கலவரங்கள். இதில் சில அரசியல்வாதிகள், பிரபலங்கள் குளிர் காய்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.


மைனாரிட்டி கலவரம்
சிறுபான்மையினருக்கு எதிரான கலவரங்களை இவர் பலமுறை நேரடியாக தனது வழக்குகளில் கண்டித்து இருக்கிறார்.


இந்தியாவில் நடக்கும் பல கலவரங்கள் தூண்டிவிடப்பட்டது. ஆனால் இதை தூண்டிவிட்டவர்கள் சந்தோசமாக இருக்கிறார்கள். அ


அனுகூலங்களை பெறுகிறார்கள். அவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. இவர்கள்தான் இந்தியாவின் சட்டத்திற்கு எதிரானவர்கள். இதுபோன்ற கிரிமினல்கள் இந்திய இறையாண்மையை கெடுக்கிறார்கள், என்று இவர் தனது உத்தரவு ஒன்றில் நேரடியாக குறிப்பிட்டார்.


முக்கிய வழக்கு
தன்னுடைய 13 வருட நீதிபதி அனுபவத்தில், முரளிதர் பல முக்கியமான வழக்குகளை சந்தித்து இருக்கிறார். முக்கியமான வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளார். 1984 சீக்கிய எதிர்ப்பு கலவரம், உத்தர பிரதேச ஆயுத சட்ட வழக்கு, எல்ஜிபிடி உடல் உறவு வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் சொத்தை ஆர்டிஐ மூலம் தெரிந்து கொள்வது தொடர்பான வழக்கு என்று பல வழக்குகளில் இவர் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளார்.


போபால்விஷ வாயு வழக்கில், இவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வழக்கறிஞராக ஆஜர் ஆனார். அதில் அவர்களுக்கு நீதியும் பெற்றுத்தந்தார்.


மொத்தம் எப்படி
இவர் மொத்தம் 3100 வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளார்.


அதேபோல் பீமா கோர்கான் வழக்கில் சிலர் தவறாக கைது செய்யப்பட்டதை முரளிதர் கண்டித்து உத்தரவிட்டு இருந்தார்.


இந்த வழக்கில் கைதான கவுதம் நாவல்கவை உடனே விடுவிக்க இவர் உத்தரவிட்டார். மும்பை போலீசுக்கு தனது கண்டனத்தையும் இவர் தெரிவித்தார். இதனால் அப்போது குருமூர்த்தி போன்ற ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இவருக்கு எதிராக கடுமையாக கட்டுரை எழுதி இருந்தனர்.


இவிவகாரத்தால் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


ஆர்எஸ்எஸ்
ஆர்எஸ்எஸ் தலைவர்கள் பலர் அப்போது முரளிதரை மிக கடுமையாக விமர்சனம் செய்தனர்.


இவர் மீது நடவடிக்கை எடுக்க தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். ஆம் நீதிபதி முரளிதரை பலமுறை டெல்லி ஹைகோர்ட்டில் இருந்து மாற்ற மத்திய அரசு சார்பாக முயற்சிகள் நடந்தது. கொலிஜியம் கூட இதற்கு சிலமுறை ஒப்புக்கொண்டது.


இவரை எப்படியாவது சண்டிகர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று தீவிரமாக முயற்சிகள் நடந்தது.


இப்போது கடைசியாக
ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால் முரளிதர் பணியிட மாற்றம் கடைசியில் கைவிடப்பட்டது.


கடைசியாக இப்போது முரளிதரை ஒருவழியாக இடமாற்றம் செய்து இருக்கிறார்கள். நேற்று நடந்த டெல்லி கலவர வழக்கில் இவர் சுழற்றிய சாட்டைதான் இதற்கு காரணம்.


நேற்று டெல்லி கலவரத்திற்கு எதிரான வழக்கு நேற்று முதல்நாள் டெல்லி ஹைகோர்ட்டில் இரவோடு இரவாக விசாரிக்கப்பட்டது.


டெல்லி வன்முறைகளில் படுகாயமடைந்து வடகிழக்கு முஸ்தாபாத் அல் ஹிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை பாதுகாப்பாக வேறு மருத்துவமனைக்கு மாற்ற டெல்லி உயர்நீதிமன்றம் நள்ளிரவில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பிறப்பித்தது ஹைகோர்ட் நீதிபதி முரளிதர், ஏஜே பாம்பானி அமர்வுதான்.
 
நேற்று என்ன
அதன்பின் நேற்று நடந்த விசாரணையில் நீதிபதி முரளிதர் மிகவும் கடுமையாக பேசினார். மத்திய அரசை அவர் கண்டித்து இருந்தார்.


அதன்பின் இன்று மதியம் 12.30 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்த நீதிபதிகள், விசாரணை நடைபெறும்போது நீதிமன்றத்தில் போலீஸ் கமிஷனர் ஆஜராக வேண்டும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தனர். அதன்பின் மதியம் போலீஸ் கமிஷ்னர் ஆஜரான பின் நடந்த வழக்கு விசாரணையிலும் முரளிதர் கடுமையான கேள்விகளை கேட்டார்.


வீடியோ எப்படி
கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் ஆகியோரின் வீடியோவை போலீஸ் பார்த்ததா, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பியது. இதற்கு டெல்லி போலீஸ் தரப்பும், உள்துறை அமைச்சகம் தரப்பும் அப்படிபட்ட வீடியோக்களை பார்க்கவில்லை என்று கூறியது.


இதைகேட்ட நீதிபதி முரளிதர், நீங்கள் சீரியஸாக பேசுகிறீர்களா? உண்மையில் அந்த வீடியோவை நீங்கள் பார்க்கவில்லையா என்று கேட்டு அதிர வைத்தார். இதையடுத்து இன்று ஹைகோர்ட்டில் அந்த வீடியோவை ஒளிபரப்ப நீதிபதிகள் ஒளிபரப்பினார்கள். அதோடு கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் போட உத்தரவிட்டார்.


இதுதான் காரணம்
இவர் நேற்று திடீர் என்று இடமாற்றம் செய்யப்பட இதுதான் காரணம். இரவோடு இரவாக இவரை மொத்தமாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி இருக்கிறார்கள். முதலில் இந்த வழக்கு முரளிதர் முன்னிலையில் விசாரணைக்கு வருவதையே மத்திய அரசு விரும்பவில்லை.


இதனால் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா, எனக்கு வேறு வழக்கு இருக்கிறது. நான் அதில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டார். இவரை எப்படியாவது தவிர்க்க முயன்றார்கள்.


கொஞ்சம் கூட முடியவில்லை
நேற்று எப்படியாவது வழக்கை ஒத்தி வைத்தால், இன்று அதை டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதி விசாரிப்பார். முரளிதருக்கு இன்று வேறு வழக்கு இருப்பதால் அவரின் அமர்வு இதை விசாரிக்காது என்று திட்டமிட்டு சொலிஸ்டர் ஜெனரல் நேரம் கேட்டு இருந்தார். ஆனால் உங்களால் ஆஜராக முடிந்தால் ஆஜராகுங்கள், இல்லையென்றால் வேறு அரசு தரப்பு வழக்கறிஞரை ஆஜர் படுத்துங்கள். இன்று கண்டிப்பாக விசாரணை நடக்கும் என்று முரளிதர் உறுதியாக கூறிவிட்டார். இதனால் மத்திய அரசு நேற்றே இவர் மீது கடும் கோபம் கொண்டது.


நேர்மை
இவரின் நேர்மைக்கு பரிசாக தற்போது இடமாற்றம் கிடைத்துள்ளது. இன்னும் இரண்டரை வருடம்தான் இவர் நீதிபதியாக இருப்பார்.


பெரும்பாலும் இவர் தனது பதவி முடியும் வரை பஞ்சாப் நீதிமன்றத்தில் இருப்பார். தன்னை மை லார்ட், யுவர் லார்ட்ஷிப் என்று அழைப்பதை இவர் ஒரு போதும் விரும்பியது இல்லை.


மனிதர்கள் எல்லோரும் சமம், பதவி வேறாக இருந்தால் நாம் எல்லோரும் ஒன்றுதான் என்பதை பலமுறை குறிப்பிட்டவர் இவர்!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்