'கண்டதும் சுட உத்தரவு என்ற தகவல் தவறானது'- டெல்லி காவல்துறை விளக்கம்!

டெல்லியில் ஏற்பட்ட வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.  மேலும் வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 


இந்த சம்பவம் காரணமாக டெல்லியில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் துணை ராணுவ படையினர், டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


அதேபோல் டெல்லியில் மஜ்பூர், ஜாப்ராபாத், சந்த்பாக், கர்வால் நகர் ஆகிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதனால் டெல்லி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். டெல்லி யமுனா விஹார் உள்ளிட்ட சில பகுதிகளில் வன்முறையாளர்களை கண்டதும் சுட காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள டெல்லி காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.


"அதில் வடகிழக்கு டெல்லியில் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு என வெளியான தகவல் தவறானது. கண்டதும் சுட வேண்டும் என்பது போல் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை" என்று தெரிவித்துள்ளது. 


மூன்றாவது நாளாக வன்முறை தொடரும் நிலையில் டெல்லியில் சட்டம் ஒழுங்கை கவனிக்க சிறப்பு காவல் ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி ஸ்ரீவத்சவா நியமிக்கப்பட்டுள்ளார்.