குடியுரிமை திருத்தச் சட்டம்: பொய்யும் மெய்யும்

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா 2019ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மத ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசம் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக அல்லது சட்ட விரோதக் குடிகளாக வந்த முஸ்லிமல்லாத பிற சமய மக்களுக்கு குடியுரிமை வழங்கு வதே இம்மசோதாவின் நோக்கம் என கூறியிருந்தார்.


பின்னர் நடைபெற்ற விவாதங்களுக்குப் பதிலளிக்கும் விதத்தில் பேசிய அமித்ஷா, “இது இந்தியாவின் அண்டை நாடு களிலிருந்து மதரீதியாகத் துன்புறுத்தப் பட்டு இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்துள்ள முஸ்லிமல்லாத பிற சமய மக்களுக்கு குடியுரிமை வழங்கவே கொண்டுவரப்பட்டது. இந்திய மக்கள் யாருடைய குடியுரிமையையும் பறிக்கும் வகையில் கொண்டு வரப்படவில்லை" என்று விளக்கமளித்தார். இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்டு , குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று சட்டமாகி விட்டது.


இந்தச் சட்டம் குறித்து நாடெங்கும் பெரும் விவாதங்கள் நடைபெற்று வருகின் றன. சுதந்திர இந்தியா இதுவரை சந்திக்காத போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.


1. நாட்டுப் பிரிவினையின் போது இந்தியாவிலிருந்து இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கும், பாகிஸ் தானிலிருந்து இலட்சக்கணக்கான இந்துக்கள் இந்தியாவுக்கும் இடம் பெயர்ந்தனர். அதன் பின்னர் இந்த இரு நாடுகளுக்கிடையே மிகப்பெரும் அளவிலான மக்களின் இடப்பெயர்ச்சி எதுவும் நடைபெறவில்லை.


2. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மிகக் கடுமையான பகைமை தொடர்ந்து நிலவி வருகின்ற சூழலில், இரு நாட்டு எல்லை களிலும் கடும் பாதுகாப்பு இருந்து வருகின்ற சூழலில் பாஸ்போர்ட், விசா விதிகள் மிகக்கடுமையாகப் பின்பற்றி வரக்கூடிய நிலையில், இந்தியாவிலிருந்து பாகிஸ் தானுக்கோ அல்லது பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கோ 1947ஆம் ஆண்டுக்குப் பின்னர் யாரும் வந்திருக்க கிஞ்சிற்றும் வாய்ப் பில்லை. எனவே பாகிஸ்தானிலிருந்து முஸ்லி மல்லாத பிற சமய மக்கள் இந்தியாவுக்குப் பெருமளவு வந்திருக்க முடியாது. அப்படி வந்தவர்கள் எவ்வளவு பேர் என்பதை உள்துறை அமைச்சர் தனது விளக்கத்தில் குறிப்பிடவில்லை .


3. ஆப்கானிஸ்தான் நமது அண்டை நாடு அல்ல. அங்கு இந்து சமய மக்களின் எண்ணிக்கை மிகமிகச் சொற்பமே. இல்லை யென்றே சொல்லிவிடலாம். எனவே அந்த நாட்டிலிருந்தும் முஸ்லிமல்லாத யாரும் இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்திருக்க வாய்ப்பில்லை. பௌத்தர்கள் நூற்றுக்கணக்கில் வந்திருக்கிறார்கள் என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.


4. மிஞ்சியிருப்பது வங்கதேசம் தான். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய - பாகிஸ்தான் போரின்போது கிழக்குப் பாகிஸ் தானிலிருந்து (இன்றைய வங்கதேசம்) இந்தியாவுக்கு அகதிகளாக வந்த இலட்சக்க ணக்கான மக்களில் (அவர்களில் இந்துக்களும் முஸ்லிம்களும் அடங்குவர்) ஒரு கணிசமான பிரிவினர், போர் முடிந்து வங்கதேசம் என்ற தனிநாடு உருவான பின்னரும் அங்கு இடம் பெயர்ந்து செல்லாமல் இந்தியாவிலேயே அதாவது அஸ்ஸாம் மாநிலத்திலேயே தங்கி விட்டனர் என்ற கருத்து பரப்பப்பட்டு வரு கிறது. இந்தக் கூற்றில் உண்மையில்லை. இன்றைக்கு அஸ்ஸாம் மாநிலத்தில் வசித்துவரும் வங்காளிகள், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு வந்து குடியேறியவர்கள். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இவர்கள் கிழக்குப் பாகிஸ்தானுக்குத் திரும்பிச் செல்லவில்லை (இன்றைய வங்க தேசம்) எனவே 1971ஆம் ஆண்டிற்குப் பிறகு வங்கதேசத்திலிருந்து மக்கள் இடம் பெயர்ந்து இந்தியாவுக்கு பெருமளவு வர வில்லை என்பதே உண்மையாகும்.


5. அஸ்ஸாம் மாநிலத்தில் NRC கணக்கெடுப்புக்குப் பிறகு அந்நியர்களாகக் கண்டறியப்பட்டுள்ள 19 இலட்சம் பேரும் வங்காளிகள் என்று சொல்லிவிட முடியாது. அரசு அறிவித்திருந்த ஆவணங்களைச் சமர்ப் பித்துத் தங்களது இந்தியக் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களே அவர்கள்.


6. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து பெருமளவு முஸ்லி மல்லாத மக்கள் இடம் பெயர்ந்து வராத சூழ்நிலையில், வங்கதேசத்தை மனதில் கொண்டே இந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்தின் படி அஸ்ஸாம் மாநிலத்தில் அந்நியர்களாகக் கண்டறியப்பட்டுள்ள 19 இலட்சம் பேரில், 13 இலட்சம் இந்து சமய மக்கள் குடியுரிமை பெற்று விடுவார்கள். மிஞ்சியிருக்கிற 6 இலட்சம் முஸ்லிம்கள் அந்நியர்களாகக் கருதப்படுவார்கள். அவர் களின் நிலை என்ன? இதுவரை மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை .


7. இந்தச் சட்டத்தை அஸ்ஸாம் மாநில மக்களும் மிகக் கடுமையாக எதிர்க்கிறார்கள். 1985ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடைபெற்ற NRC கணக்கெடுப்பில் அந்நியர்களாகக் கண்டறியப்பட்ட அனைவரையும் அம்மாநி லத்தை விட்டு வெளியேற்ற வேண்டும். இதில் மதப்பாகுபாடு கூடாது என்பதுதான் தாக இருக்கிறது. எனவே இதனை எதிர்க் கிறார்கள்.


8. இலங்கை , பர்மா, பூடான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள மக்களின் குடியுரிமைக்கு இந்த மசோதா வழிவகை செய்யவில்லையே என்ற கேள்விக்கு உள்துறை அமைச்சர் தக்க பதில் அளிக்கவில்லை . ஆனால் பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி, இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு மத ரீதியிலான ஒடுக்குமுறை இல்லை. அத னால் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை பற்றி மசோதாவில் குறிப்பிடப்படவில்லை என்று கூறுகிறார். இது ஒரு அபத்தமான வாதம். இலங்கைத் தமிழர்களின் இனமும், சமயமும் தானே பிரச்னை? அவர்கள் சிங்களர்களாகவோ, பௌத்தர்களாகவோ இருந்தால் எந்தப் பிரச்னையும் வந்திருக்க வாய்ப்பில்லையே. எனவே அங்கும் மத ரீதியிலான துன்புறுத்தல் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.


9. வங்கதேசத்தை எங்களின் நட்பு நாடு என்று சொல்லிக் கொண்டே, அந்த நாட்டில் மதச் சிறுபான்மையினர் துன்புறுத் தப்பட்டனர் என்று இந்திய அரசின் உள்துறை அமைச்சரும், பிரதமரும் தொடர்ச்சியாக பேசிவருவது எந்தவகையில் நியாயம்?


10. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, விரிவான அறிக்கை ஒன்றை வெளி யிட்ட வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர் “எங்கள் நாட்டில் எந்தவித மான மதத் துன்புறுத்தலும் நிகழவில்லை . 1971ஆம் ஆண்டுக்குப் பிறகு எங்கள் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு யாரும் செல்ல வில்லை. இந்தியாவை விட வங்கதேசம் பல துறைகளில் முன்னேறியுள்ள நிலை யில் இங்கிருந்து இடம் பெயர்ந்து செல்ல வேண்டிய தேவை எம்மக்களுக்கு இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு இந்திய அரசின் உள்துறையோ அல்லது வெளியுறவுத் துறையோ இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை .


11. மதத் துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் 1947ஆம் ஆண்டு 23 சதவிகிதமாக இருந்த இந்துக்களின் எண் ணிக்கை 2011ஆம் ஆண்டு 3.7 சதவிகித மாகக் குறைந்து விட்டதாகவும், வங்க தேசத்தில் 22 சதவிகிதமாக இருந்த அச்சமய மக்களின் எண்ணிக்கை 2011ஆம் ஆண்டு 7.8 சதவிகிதமாகக் குறைந்து விட்டதாகவும் உள்துறை அமைச்சர் சில புள்ளி விவரங்களை அளித்துள்ளார். 15.12.2019 தேதி தினத்தந்தி நாளிதழில் “குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதா இந்தியாவைச் சார்ந்தவர்கள் யார்'' என்ற தலைப்பில் வெளியான கட்டு ரையிலும் இந்த புள்ளிவிவரங்கள் இடம் பெற்றிருந்தன (பக்கம் 13). துக்ளக் வார இதழில் எழுத்தாளர் மாலனும் தான் எழுதிய கட்டுரை ஒன்றில் இதே புள்ளிவிவரங்களை எடுத்தாண்டுள்ளார். இந்த புள்ளி விவரங்கள் உண்மைதானா?


1947ஆம் ஆண்டு இந்தியாவிலோ பாகிஸ்தானிலோ மக்கள் தொகை கணக் கெடுப்பு எதுவும் நடைபெறவில்லை1941ஆம் ஆண்டு பிரிக்கப்படாத இந்தியா வில் தான் கணக்கெடுப்பு நடைபெற்றதுஅந்தப் புள்ளி விவரங்களைத் தான் உள்துறை அமைச்சர் 1947ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களைப் போலக் குறிப்பிடு கின்றார். 1947ஆம் ஆண்டு (நாட்டுப் பிரிவினையின் போது) பாகிஸ்தானிலிருந்து (தற்போதைய வங்க தேசம் உட்பட) இலட்சக் கணக்கான இந்துக்கள் இந்தியாவுக்குக் குடி பெயர்ந்து வந்தனர். (அதுபோல இலட்சக் கணக்கான முஸ்லிம்களும் பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்து சென்றனர்) இந்தக் குடி பெயர்ச்சியின் தாக்கம் அதற்குப் பின்னர் 1951ஆம் ஆண்டு இந்தியாவிலும், பாகிஸ் தானிலும் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் போதுதான் வெளிப்பட்டதுஅவ்வாண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாகிஸ்தானில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் மக்கள்தொகை 3.44 சதவிகிதமாகும். அதன் பின்னர் அந்நாட்டில் 1961, 1972, 19821998 ஆகிய ஆண்டுகளில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றன. அதன்படி அந்த நாட்டில் இந்துக்களின் எண்ணிக்கை பின்வரு மாறு இருந்தது.


1951 - 3.44, 1961-2.8, 1972-3.251981 - 3.33, 1998 - 3.7 சதவிகிதமாக இருந்தது. (2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விவரங்கள் இன்னமும் வெளி யிடப்படவில்லை )


எனினும், தற்போதைய பாகிஸ்தானின் மக்கள்தொகை 21 கோடியென்றும், அதில் இந்துக்களின் எண்ணிக்கை 4 சதவிகிதம் எனவும் அந்நாட்டு இந்து கவுன்சில் தலைவர் மங்லானி தெரிவிக்கின்றார். மேற்கண்ட தகவல்கள் “டைம்ஸ் ஆஃப் இந்தியா'' நாளிதழ் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப் பிடப்பட்டுள்ளன. (இணைய தளத்தில் இக் கட்டுரையைப் பார்க்கலாம்) எனவே பாகிஸ் தானின் இந்து சமய மக்கள்தொகை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த புள்ளிவிவரங்கள் சரியானவை அல்ல.


12. இந்துக்களுக்கு இந்தியாவை விட்டால் வேறு நாடு கிடையாது. ஆனால் முஸ்லிம்களுக்கு ஏராளமான நாடுகள் உள்ளன. எனவேதான் இந்துக்கள் மேல் பெரும் கவலை கொண்டு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளோம் என சங்பரிவார பிரமுகர்கள் ஊடக விவாதங்களின் போது குறிப்பிடுகின்றனர். இதுவும் உண்மைக்குப் புறம்பானதாகும். இலட்சக்கணக்கான இந்து சமய மக்கள் இந்தியாவிலிருந்து குடி பெயர்ந்து சென்று மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பிஜித் தீவுகள், மொரிசியஸ், பிரிட்டிஸ் கயானா, தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். மலேசியாவின் பினாங்கு மாகாணத்தில் இராமசாமி என்பவர் தற்போது துணை முதல்வராகப் பொறுப்பு வகிக்கிறார். அந்நாட்டு அமைச்சரவையில் இந்து அமைச் சர்கள் உள்ளனர். சிங்கப்பூரிலும் அதே நிலைதான். மொரிசியஸ் தீவில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த இந்து ஒருவர் அந்நாட்டின் அதிபராகவே இருந்தார். அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் இந்திய வம்சாவளியினர் (இந்துக்கள்) அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் உள் நாட்டுப் போர் நடைபெற்ற போது அங் கிருந்து பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் (இந்துக்கள்) புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடு களுக்குச் சென்றனர். அங்கு அனைத்து விதமான உரிமைகளுடனும் வாழ்ந்து வருகின்றனர். அந்நாடுகள் திக்கற்ற நிலையில் அகதிகளாக வருபவர்களை மனிதாபிமான அடிப்படையில் தான் பார்க்கிறார்களே தவிர, மத அடிப்படையில் அல்ல.


13. வங்கதேசத்திலிருந்து 1971ஆம் ஆண்டுக்குப்பிறகு மக்கள் ஊடுருவல் இருந்த தென்றால், இது குறித்து ஆதாரப்பூர்வமான தகவல்களுடன் அந்நாட்டு அரசுடன் பேசி ஊடுருவல்காரர்கள் அனைவரையும் திருப்பி அனுப்பிவிடலாமே. இது தொடர் பாக முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும், வங்கதேசப் பிரதமர் ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கும் ஏற்கனவே ஓர் ஒப் பந்தம் இருக்கிறது என்பதும் இங்கு குறிப் பிடத்தக்கது.


14. தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் கொண்டு வரப்பட்டது. அப்போது எதிர்க் காதவர்கள் இப்போது எதிர்ப்பது ஏன் என பாஜகவினர் கேட்கின்றனர். NPR காங்கிரஸ் ஆட்சியின்போது 2010ஆம் ஆண்டு எடுக் கப்பட்டது உண்மைதான். ஆனால், தற்போது பாஜக அரசு எடுக்கவிருக்கும் இந்தக் கணக் கெடுப்பில் புதிதாக பெற்றோர் பிறந்த ஊர், வயது கேட்கப்பட உள்ளது. படிவங்கள் அதற்கேற்ப மாற்றப்பட்டுள்ளன. எனவே தற்போது எடுக்கப்படவிருக்கிற NPR எப் படி முன்னர் எடுக்கப்பட்ட ஒன்றோடு ஒப்பிட முடியும்? பெற்றோர்களின் பிறந்த ஊர் மற்றும் வயது போன்ற தகவல்கள் கேட்கப்படுவதன் நோக்கம் என்ன? மத்திய அரசு விளக்கவில்லை .


15. தேசிய குடிமக்கள் பதிவேடு NRC குடியுரிமை திருத்த சட்டம் 2019 உடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. NRCயை நடைமுறைப்படுத்தவே CAA கொண்டுவரப்பட்டிருக்கிறது. அஸ்ஸாம், மேற்கு வங்கம், வடகிழக்கு மாநிலங்கள் ஆகிய எல்லைப்புற மாகாணங்களில் NRC கணக்கெடுப்பு நடத்தப்படுவதை கொஞ்ச மாவது நியாயப்படுத்த முடியும். ஆனால் நாடு முழுவதும் எதற்காக இந்தக் கணக் கெடுப்பு நடத்தப்படவேண்டும்? ஒரு வேளை அப்படி கணக்கெடுப்பு நடத்தி அதில் சில இலட்சம் முஸ்லிம்கள் ஆவணங் களைச் சமர்ப்பிக்க முடியாமல் இருந்தால் அவர்களின் நிலை என்ன? பிற சமய மக்களைப் பொறுத்தவரை குடியுரிமை திருத்தச் சட்டம் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிவிடும். ஆனால் முஸ்லிம்கள் நிலை? அரசு இதுவரை இதனைத் தெளிவு படுத்தவில்லை . இந்தியக் குடிமக்கள் யாருக்கும் இதனால் பாதிப்பு வராது என்று குறிப்பிடுகின்றார் நமது பிரதமர். ஆனால் யார் இந்தியர்? யார் இந்தியர் அல்லாதவர் என்று தீர்மானிக்கும் உரிமை பிரதமரிடமும், உள்துறை அமைச்சரிடமும் மட்டுமல்லவா இருக்கிறது. அதுதான் முஸ்லிம்களின் அச்ச மாகும்.


16. இந்திய அரசியல் சட்டப் பிரிவுகள் 14 மற்றும் 15 ஆகியவற்றுக்கு முரணாகக் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். அகதிகளை அல்லது சட்ட விரோதக் குடிகளை மனிதாபிமான அடிப்படையில் தான் பிற நாடுகள் தீர்மானிக்கின்றன. மதத்தின் அடிப்படையில் தீர்மானிப்பதில்லை. எனவே இது பன்னாட்டு மனிதஉரிமைச் சட்டங்களுக்கும் முரணானதாகும். தேசிய குடிமக்கள் பதிவேடு NRC முற்றிலும் தேவையற்ற கணக்கெடுப்பாகும். அதனை நடைமுறைப்படுத்தக் கூடாது. NRC எனப்படும் தேசிய மக்கள் தொகைப் பதிவேடு 2010ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட அதே முறையில் இப்போதும் எடுக்கப்படவேண்டும். இதுவே நாட்டின் இறையாண்மையிலும், ஒருமைப்பாட்டிலும், ஜனநாயகத்திலும், மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை கொண்டுள்ள அனைத்து மக்களின் ஒருமித்த கோரிக்கையாகும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்