டெல்லியில் பெண் போலீஸுக்கு நேர்ந்த கொடூரம்

டெல்லி காவல்துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் பெண் ஒருவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உறவினர்களின் உதவியுடன் அவரது 19 வயது மகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.


அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் எனக் கூறியுள்ளனர். போலீஸார் விசாரணையில் அந்தப் பெண் அதிர்ச்சிகரமான தகவலைத் தெரிவித்துள்ளார். காதல் விவகாரம் அம்மாவுக்குத் தெரிந்துவிட்டதால் காதலனுடன் சேர்ந்து அவரைக் கொலை செய்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுகுறித்து பேசிய போலீஸார், மகளின் காதல் குறித்து பெண் காவலருக்கு சமீபத்தில்தான் தெரியவந்துள்ளது. பெண் காவலரும் அவரது கணவரும் பணிக்குச் சென்றுவிடுவார்கள்.


உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லாததால் மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துவந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த ஜிதேந்திரா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மகளின் காதல் விவகாரம் தெரிந்ததையடுத்து மகளைக் கண்டித்துள்ளார். ஜிதேந்திரா பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்குச் சென்று வருகிறார்.


பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்காக மகள் தயாராகிக்கொண்டிருந்ததை அறிந்து அவரை ஆத்திரத்தில் அறைந்துள்ளார் பெண் காவலர். தன் மகளின் காதலனான ஜிதேந்திரா வீட்டுக்குச் சென்றவர், அவரது பெற்றோரிடம் காதல் விவகாரம் குறித்து தெரிவித்துள்ளார்.


மகனைக் கண்டித்து வைக்குமாறு கூறிவிட்டு வீடு திரும்பியுள்ளார். ஜிதேந்திரா வந்தால் வீட்டுக்கு வரச் சொல்லுங்கள் எனக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.


இதற்கிடையில் அம்மா அடித்தது குறித்தும் வீட்டுக்குச் சென்றது குறித்தும் தன் காதலனுக்கு அந்தப்பெண் தகவல் தெரிவித்துள்ளார். காதலுக்குத் தாய் இடையூறாக இருப்பார் என இருவரும் கருதியுள்ளனர். எனவே, அவரைக் கொலை செய்துவிடலாம் என முடிவு செய்துள்ளனர். ஜிதேந்திரா அந்தப்பெண்ணின் வீட்டுக்கு வந்ததும் பெண் காவலர் அவரையும் கன்னத்தில் அறைந்து கடுமையாகப் பேசியுள்ளார்.


அப்போது சமையலறையில் இருந்த மிளகாய்ப்பொடியை எடுத்து வந்து பெண் காவலரின் முகத்தில் அவரது மகள் தூவியுள்ளார். இதில் மேலும் ஆத்திரமடைந்த பெண் காவலர், இருவரையும் பிடிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த கிரைண்டர் கல்லைக் கொண்டு முகத்தில் தாக்கியுள்ளார். இதில் முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் கீழே சரிந்துள்ளார். அதன்பின் இருவரும் கயிற்றைக் கொண்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்.


அதன்பின்னர் உறவினர்களுக்கு போன் செய்து அம்மா கீழே விழுந்துவிட்டதாகவும் மூச்சுப்பேச்சின்றி இருப்பதாகவும் கூறியுள்ளார். உறவினர்களின் உதவியுடன் பெண் காவலரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.


அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதுதொடர்பாக தகவல் அறிந்து மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தோம். அப்போதுதான் அந்தச் சிறுமி தாயைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்” என்றார். பெண் காவலரின் கணவர் அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)