இயக்கம் தொடங்குகிறாரா ராம மோகன ராவ்என்ற தகவலால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

முன்னாள் தலைமைச்செயலாளர் ராமமோகன ராவ், அரசியல் இயக்கம் தொடங்கவுள்ளார் என்ற தகவலால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


2016-ம் ஆண்டு இவர் தலைமைச்செயலாளராக இருந்தபோது, இந்திய வரலாற்றில் எங்கும் நடந்திடாத வகையில் வருமான வரித்துறையினர் அவர் வீட்டிலும், அலுவலகத்திலும் சோதனை நடத்தினார்கள். அது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த வழக்கின் மர்மம் இன்றுவரை உடைபடவில்லை.


இந்த நிலையில் சமீபகாலமாக தெலுங்கு மொழி பேசும் சமுதாயத்தினரின் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தவர், இப்போது அரசியல் ரீதியான கருத்துகளையும் கூறத் தொடங்கியுள்ளார். நாளை மதுரையில் நடைபெறும் மன்னர் திருமலை நாயக்கர் பிறந்த தின விழாவில் கலந்துகொள்ளும் ராமமோகனராவ் அந்த விழாவில் புதிய அரசியல் இயக்கம் ஒன்றை அறிவிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.


விழா ஏற்பாடுகளைக் காண நேற்று வந்த ராமமோகன ராவ் செய்தியாளர்களிடம், ``அந்நியர்களின் ஆதிக்கத்திலிருந்து தென்னிந்தியாவைப் பாதுகாத்தவர் மன்னர் திருமலை நாயக்கர். சாதி, பேதம் பார்க்காமல் அனைத்து மக்களுக்கும் சிறப்பான ஆட்சி செய்தவர். மதுரை மீனாட்சி அம்மன் கோயில், நாயக்கர் மஹால், என்று சிறப்பான கட்டுமானங்களைக் கொடுத்தவர்கள்.


மதுரையில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் அனைத்தும் அவர் உருவாக்கியதுதான். அவர் ஆட்சியில் மக்களை ஒருங்கிணைத்தது போல இப்போதும் ஒரு வரலாற்றுத் தேவை ஏற்பட்டுள்ளது. எனது வழிகாட்டுதலில் உருவாக்கப்படவுள்ள இந்த அமைப்பில் நாயுடு, நாயக்கர், ரெட்டியார், செட்டியார், யாதவர், அந்தணர், அருந்ததியர், மீனவர், இருளர் எனப் பல்வேறு சமுதாயங்களையும் ஒருங்கிணைக்க உள்ளோம்.


திருமலை நாயக்கரின் பிறந்த நாள் விழாவை மக்கள் விழாவாகக் கொண்டாட உள்ளோம். இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்துகொள்வார்கள்'' என்று கூறினார். ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்த ராமமோகன ராவ், முழு அரசியல்வாதியாக அவதாரமெடுக்கிறாரா என்பது நாளை நடைபெறவுள்ள விழாவில் தெரியும்!


ஆந்திர நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியின் அரசியல் ஆலோசகராக ராம மோகன ராவ் இருக்கிறார் என்பதும் அக்கட்சி சமீபத்தில் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்துள்ளது என்பதும் கூடுதல் தகவல்!