பழங்குடியினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சிறுவனின் புகாரை திரும்பப் பெறச் செய்தனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலையில் யானைகள் முகாமைத் தொடங்கி வைக்க வந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து தனது காலணியைக் கழற்றச்செய்த சம்பவம் நாடு முழுவதிலும் கடுமையான எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.


இந்த நிலையில் நேற்று மாலை பாதிக்கப்பட்ட பழங்குடியின சிறுவனை பழங்குடி அமைப்புகள் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் செய்தனர். அமைச்சருக்கு எதிராகப் புகார் அளித்த சம்பவம் மேலும் பரபரப்பைக் கூட்டியது. இரவோடு இரவாக முற்றுகைப் போராட்டத்துக்கான அறிவிப்பையும் வெளியிட்டன அரசியல் கட்சிகள்.


இதில், மிரண்டு போன அமைச்சர், வனத்துறை அதிகாரிகளை அனுப்பி சிறுவனின் உறவினர்களுடன் பேசி ஊர்மக்களோடு ஊட்டிக்கு வருமாறு கூறியிருந்தார். வனத்துறை ஏற்பாடு செய்த மஸ்தா வாகனத்தில் அமைச்சர் தங்கியிருந்த தமிழகம் மாளிகைக்கு இரு சிறுவர்களும் வந்திறங்கினர்.


அவர்களுடன் ஏராளமான பழங்குடியின மக்கள் மற்றும் பழங்குடியினப் பாதுகாப்பு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த சிலரும் ஓர் அரங்குக்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகள், அதிகாரிகள் ஆகியோர் உள்ளே பேச்சுவார்த்தை நடத்தினர். வெளியில் இருந்த காவல்துறை அதிகாரிகளோ, உள்ளே பத்திரிகையாளர்கள் செல்லாமல் பார்த்துக்கொண்டனர்.


உள்ளே சுமார் இரண்டு மணிநேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்பிறகு வெளியில் வந்த அமைச்சர், `எல்லாம் முடிந்தது, வருத்தம் தெரிவித்தாகிவிட்டது. நாங்கள் சமாதானமாகிவிட்டோம்' எனப் பேட்டி கொடுத்துவிட்டு காரில் ஏறி ஊருக்குக் கிளம்பினார்.


பாதிக்கப்பட்ட பழங்குடியின சிறுவனின் தாயார் காளியம்மாள் பேசுகையில் ``எங்க கிராமத்துக்கு அடிப்படை வசதி கேட்டிருக்கோம். வேலை வாய்ப்பும் கேட்டோம். எல்லாமே ஏற்பாடு பன்றேன்னு சொன்னாங்க.


இனிமேல் எங்களுக்கும் அவங்களுக்கும் எந்தப் பகையும் இல்ல. எல்லாமே சால்வ் ஆகிடுச்சி. இனிமேல் என்னோட பையன் இது விஷயமாக பேச மாட்டான்" எனக் கூறி தன் மகனை அழைத்துக்கொண்டு வனத்துறை வாகனத்தில் கிளம்பிவிட்டார். இதற்கிடையில் பழங்குடி மற்றும் சமூக நீதி அமைப்பைச் சேர்ந்த சிலர், ` இது அநியாயம்' எனக் கூறி கோஷங்களை எழுப்பினர். சிறிது நேரத்தில் அவர்களையும் காவல்துறையினர் வெளியில் அனுப்பினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)